Home நாடு கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

கோலாலம்பூர் & சிலாங்கூர் தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி

1331
0
SHARE
Ad

ஷா ஆலாம் – மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும், அதன் மூலம் தங்களின் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கங்களுடன் மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின், தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

புறநகர், நகர்ப்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவின் (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது

#TamilSchoolmychoice

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், மலேசிய உத்தமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி ஷா அலாம் தெராத்தாய் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

குணசேகரன் கந்தசுவாமியின் வரவேற்புரை

இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் குணசேகரன் கந்தசுவாமி (படம்), “கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த வருடம் அதிகமான தமிழ்ப்பள்ளிகளும், மாணவர்களும் கலந்துக் கொண்டனர். மேலும் அடுத்த வருடம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொள்ளுமாறு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்” என சிலாங்கூர் மாநிலத் தலைமையாசிரியர் மன்ற தலைவர் சந்திரன் அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மாநில ஆட்சி குழு உறுப்பினர் ஹீ லோய் சியானிடம், “சிலாங்கூரில் உள்ள 48 தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப மையங்கள் செயல்படுகின்றன, ஆனால் பல நடுவங்கள் பொருளாதார சிக்கலினால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. அதனால் மாநில அரசாங்கம் பள்ளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினால், தொடர்ந்து இந்த நடுவங்கள் சிறப்பாக இயங்கும். சிலாங்கூர் மாநில அரசின் உதவியால், பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர்” எனத் தெரிவித்த குணசேகரன், தங்களின் திட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அவர்களுக்கு தனது நன்றியை இதன் வழி தெரிவித்துக் கொண்டார்.

சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உரை

தொடர்ந்து சிறப்புரையாற்றிய செந்தோசா சட்டமன்ற உறுப்பினர்  டாக்டர் குணராஜ் (படம்) அவர்கள் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சிறந்த ஆற்றல்மிக்க மாணவர்களை உருவாக்கும். அதன் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவரும் மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தகவல் தொடர்பு புதிர்ப் போட்டியில் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களை இப்போட்டிக்கு அழைத்து வந்த அவர்தம் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் குணராஜ்.

மேலும் அடுத்த வருடம் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, இன்றைய போட்டிக்கு நன்கொடையாக 3000 ரிங்கிட் நிதி உதவி வழங்குவதாக குணராஜ் அவர்தம் உரையில் தெரிவித்தார். மேலும் இப்போட்டியை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் உரை

நிகழ்ச்சியில் தொடர்ந்து சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர், ஹி லொய் சியான் (படம்) திறப்புரையாற்றினார். சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளை நடத்த சிலாங்கூர் மாநில அரசாங்கம் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர்தம் உரையில் கூறினார்.

மேலும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும், தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவம் அமைக்க வழிவகை செய்வதாகவும், தொடர்ந்து இந்த மையங்கள் செயல்பட தேவையான மானியங்களை பெற உதவுதாகவும் அவர் தம் உரையில் குறிப்பிட்டார். தனது அதிகாரத்திற்கு கீழ் இருக்கும் அகன்ற இலவச இணைய சேவையை குறிப்பிட்டு, சிலாங்கூர் மாநிலம் முழுவழும் கூடிய விரையில் அதிவேக இணைய வசதியை மக்கள் பெற முடியும் என்று கூறி, இன்றைய போட்டிக்கு 5000 ரிங்கிட்டை நன்கொடை அளிப்பதாக கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

38 பள்ளிகளில் இருந்து 141 மாணவர்கள்…

இவ்வாண்டு சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் மாநிலத்திலிருந்து இருந்து சுமார் 141 மாணவர்கள் 38 பள்ளிகளில் இருந்து இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன.

அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேச் போட்டி என அனைத்து போட்டிகளிலும் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான . தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைப்பெறும்.