கோலாலம்பூர்: 1998-இல் அன்வார் இப்ராகிம் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும், தற்போதைய ஆட்சி நிருவாகத்தில் அமைச்சர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை விவகாரத்திலும் முரண்பாடான நிலைப்பாட்டை பிரதமர் மகாதீர் முகமட் எடுத்துள்ளதாகக் கூறப்படும் கருத்துகளை பிரதமர் மறுத்துள்ளார்.
தமது வலைப்பதிவு இடுகையில் இது குறித்துப் பேசிய மகாதீர், அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்ட போது, அவர் தொடர்பான பாலியல் காணொளி, அவர் நீக்கப்பட்டதற்கு பிறகு வெளியானது என்றும், அஸ்மின் அலி குறித்த காணொளி அதற்கு முன்னதாக, அவரின் நற்பெயரைக் கலங்கடிக்கும் எண்ணத்தில் வெளியிடப்பட்டது என்றும் பிரதமர் தெளிவுப்படுத்தி உள்ளார்.
“நீதிமன்றம் ஏற்கனவே தனது முடிவை எடுத்திருந்தது. அடுத்தடுத்த காணொளிகள் நீதிமன்றத்தையோ அல்லது வேறு யாரையோ பாதிக்கவில்லை. அது என் முடிவிற்கு ஒரு கருத்தாக அமையவில்லை” என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அப்போது அன்வாருடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளிகள் குறித்து எந்த விவரங்களையும் மகாதீர் வழங்கவில்லை.
பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியை அகற்றுவதற்கான ஒரு பெரிய சதித்திட்டத்தின் பகுதியாக இம்முறை வெளியான காணொளி அமைகிறது என்று அவர் கூறினார்.
“இந்த விவகாரத்தில் காணொளி முதலில் வெளிவந்துள்ளது. வெளிப்படையாக, இது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை அவரது எதிர்காலத்தை சிதைப்பதற்கான ஒரு முயற்சியாகும்” என்று கூறிய மகாதீர், இதுபோன்ற முயற்சிகளுக்கு அவர் உறுதுணையாக இருக்க மாட்டார் என்று வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் விமர்சித்ததைத் தொடர்ந்து இந்த வலைப்பதிவினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.