புக்கிட் மெர்த்தாஜாம், ஏப்ரல் 5 – எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போகும் தொகுதி பெர்மாத்தாங் பாவ்வா அல்லது பேராக் மாநிலம் தம்பூனா என்பதை முடிவு செய்ய இன்னும் சில மணி நேரங்கள் தனக்கு தேவைப்படும் என்றும், மக்கள் அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பெர்மாத்தாங் பாவ் தொகுதியைச் சேர்ந்த சில தலைவர்கள் தன்னை மீண்டும் அத்தொகுதியிலேயே போட்டியிட கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும், இதுபற்றி கோலாலம்பூர், மற்றும் பேராக் மாநில தலைவர்களுடன் தான் கலந்தாலோசித்து வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமையன்று வரும் பொதுத் தேர்தலில் தான் பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தார்.ஆனால் பேராக் மாநிலத்தில் தான் போட்டியிடப்போகும் தொகுதியை அப்போது தெரிவிக்கவில்லை.
எனவே இன்று இரவு தாமான் பாவ் ஜெயாவில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அன்வார், தான் போட்டியிடும் தொகுதியை பற்றிய தனது இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தம்பூன் தொகுதியில் அம்னோ வேட்பாளர் டத்தோ அகமத் ஹுசனி ஹனாட்ஸலா தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் முகமத் அஸ்ரி ஒத்மானை விட 5,386 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது