Home One Line P1 “துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” – நம்பிக்கைக் கூட்டணியின் “துருப்புச் சீட்டு” ஷாபி அப்டால் உறுதி

“துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” – நம்பிக்கைக் கூட்டணியின் “துருப்புச் சீட்டு” ஷாபி அப்டால் உறுதி

714
0
SHARE
Ad

கோத்தா கினபாலு – “நான் இன்னும் துன் மகாதீரையே ஆதரிக்கிறேன்” என உறுதி கூறியுள்ள சபா முதலமைச்சர் ஷாபி அப்டால், மலேசிய அரசியலில் நடைபெற்று வரும் சதுராட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணியின் முக்கியத் “துருப்புச் சீட்டாக” மாறியுள்ளார்.

காரணம், தன்னை ஆதரிக்கும் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலை துன் மகாதீர் வெளியிட்டபோது அதில், ஷாபி அப்டாலும், அவரது கட்சியின் மற்ற மக்களவை உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர்.

மொகிதின் யாசின் பிரதமர் பதவியை ஏற்றதும், ஷாபி அப்டால் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறிவிடுவார் என்றும் மகாதீர் அணியிலிருந்து விலகி விடுவார் என்றும் ஆரூடங்கள் கூறப்பட்டன.

மொகிதினின் “பழைய நண்பர்” ஷாபி அப்டால்…

#TamilSchoolmychoice

காரணம், எப்போதுமே மொகிதினின் நெருங்கிய அரசியல் சகாவாகத் திகழ்ந்தவர் ஷாபி அப்டால். மொகிதின் யாசின் அம்னோவின் துணைத் தலைவராக இருந்த காலத்தில், அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவராகப் பதவி வகித்தார் ஷாபி அப்டால்.

மொகிதினுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஷாபி அப்டால், சபா அம்னோவின் தலைவராகவும் அப்போது இருந்தார். 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் நஜிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்த ஷாபி அப்டால், மொகிதின் யாசினோடு சேர்த்து அம்னோவிலிருந்து விலக்கப்பட்டார்.

“பழைய நண்பர்கள்” – ஷாபி அப்டால், மொகிதின் யாசின்

மொகிதின் யாசின், மகாதீரோடு இணைந்து பெர்சாத்து என்ற புதிய கட்சியைத் தொடக்கியபோது, ஷாபி அப்டாலும் அந்தக் கட்சியில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சபா மாநிலத்திற்கே உரிய தனித்துவமான அரசியல் சூழ்நிலைகளால், பார்ட்டி வாரிசான் சபா என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்து அதற்குத் தலைவரானார் ஷாபி அப்டால்.

இதனால் சபாவில் அம்னோவும் பிளவுபட்டது. அம்னோ தலைவர்கள் பலர் ஷாபி அப்டாலுடன் இணைந்தனர்.

சபா மக்கள் தீபகற்ப மலேசியாவில் இயங்கும் கட்சிகளை முழுமனதுடன் ஆதரிப்பதில்லை என்பதையும், தீபற்கப மலேசிய அரசியல்வாதிகளின் தலையீடுகள் சபாவில் இருப்பதை விரும்புவதில்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்ததால்தான் ஷாபி அப்டால் புதிய கட்சி அமைத்தார்.

எனினும், 2018 பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியில் இருந்த பெர்சாத்து, ஜசெக, பிகேஆர், அமானா ஆகிய கட்சிகளுடன் இணைந்து , கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு சபா மாநிலத்தையும் கைப்பற்றினார் ஷாபி அப்டால்.

சபா மாநிலத்தில் வலுவுடன் திகழும் ஷாபி அப்டால்…

இவ்வாறு, மொகிதினுடன் நீண்ட கால அரசியல் தொடர்பு கொண்டிருந்த “பழைய நண்பரான” ஷாபி அப்டால் மீண்டும் மொகிதினுடன் கைகோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் “நான் மகாதீரோடுதான் இணைந்திருப்பேன்” என உறுதிபடத் தெரிவித்து, மகாதீரின் போராட்டத்திற்கு வலிமை சேர்த்துள்ளார் ஷாபி அப்டால்.

“மாநிலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம். ஆனால், சபா மக்களின் நலன்களுக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்” என்றும் ஷாபி அப்டால் கூறியிருக்கிறார்.

நேற்று வியாழக்கிழமை (மார்ச் 5) தனது கோத்தாகினபாலு அலுவலகத்தில் சபா சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஷாபி அப்டால் “மேம்பாடு, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் சபா மக்கள் பின்தங்கி விடாமல் இருக்க மத்திய அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு அவசியம். இதனை மொகிதின் யாசின் புரிந்து கொள்வார் என நம்புகிறேன். அவரிடம் எனக்கு எதிர்ப்புணர்வு இல்லை. அவர் எனது பழைய நண்பர். ஆனால், அரசியல் நெருக்கடிகள், அழுத்தங்களுக்கு ஆளாகக் கூடாது என்றும் நான் கருதுகிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.

ஷாபி அப்டாலின் பார்ட்டி வாரிசான் சபா, 60 சட்டமன்றங்களைக் கொண்ட சபா மாநிலத்தில் 33 தொகுதிகளைத் தனித்தே கொண்டிருக்கிறது. மேலும் ஜசெக, பிகேஆர், அமானா ஆகிய நம்பிக்கைக் கூட்டணி இணைந்து மேலும் 19 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கின்றன.

சபா மாநிலத்தின் மற்றொரு பிரத்தியேக அம்சம் என்னவென்றால், 60 தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சபாவில் 6 பேர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கும் மாநில சட்டம் வகை செய்கின்றது. முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் மாநில ஆளுநர் இந்த நியமனங்களைச் செய்வார். தற்போது 5 பேர் இதுவரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதன் காரணமாகவும், ஷாபி அப்டால் நம்பிக்கைக் கூட்டணியோடு இணைந்திருப்பார் எனவும், அவருக்கு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியோடு இணைவதற்கு அரசியல் தேவையும் இல்லை எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மீண்டும் சபாவில் அம்னோ காலூன்ற வாய்ப்பு மறுக்கும் வியூகம்

மேலும் மொகிதினுடன் இணைவதன் மூலம் அம்னோவையும், பாஸ் கட்சியையும் சபாவில் காலூன்ற வைக்கும் அளவுக்கு நுழைவாயிலைத் திறந்து விடும் தவறையும் ஷாபி அப்டால் செய்தவராகிவிடுவார் என்றும் எதிர்காலத்தில் இந்த தவறினால், அவரது ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் வாய்ப்பே அதிகம் என்றும் கருதப்படுகிறது.

தற்போது சபா மாநிலத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதிகளையும், கூட்டரசுப் பிரதேசமான லாபுவானையும் சேர்த்து மொத்தம் 9 நாடாளுமன்றத் தொகுதிகளை வாரிசான் சபா கொண்டிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற சபா மாநிலத்தின் கிமானிஸ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வாரிசான் கட்சியை அம்னோ தோற்கடித்ததன் மூலம் அம்மாநிலத்தில் மீண்டும் அம்னோ தனது ஆதரவை மீட்கத் தொடங்கியிருக்கிறது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே நாடாளுமன்றம் கூட்டப்படும் என்பதால் அதுவரையில் ஷாபி அப்டாலின் நிலைப்பாடு மாறாமல் இருந்தால் – அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக கட்சி தாவாமல் இருந்தால் –

நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கும்- மொகிதின் யாசின் ஆட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற முடியாமல் ஆட்டம் காண்பதற்கும் – ஷாபி அப்டாலே முக்கியக் காரணமாக அமைவார்.

அதே வேளையில், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மொகிதின் யாசினுக்கு தனது ஆதரவை ஷாபி அப்டால் வழங்கினால் – தொடர்ந்து தனது ஆதரவை அவர் மீட்டுக் கொள்ளாமல் மொகிதினுடன் இணைந்திருந்தால் –

அடுத்த மூன்றாண்டுகளுக்கு மொகிதின் யாசின் நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு தொடர்ந்து ஆட்சியில் நிலைத்திருப்பதற்கான முழுமுதற் காரணமாகவும் ஷாபி அப்டால் திகழ்வார்!

-இரா.முத்தரசன்