கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தனது நிழலுக்கு பயப்படுவதால், தொடர்ந்து என்னை அவதூறு செய்து, அவமானப்படுத்துகிறார் என்று டான்ஸ்ரீ மூசா அமான் கூறினார்.
16- வது சபா மாநிலத் தேர்தலில் மூசா வேட்பாளராக இல்லாததால் ஷாபி கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் தெரிவித்தார்.
முக்கியமானது என்னவென்றால், வாரிசான் கட்சியின் தலைவர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் சபா மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர் எல்லா விதமான விஷயங்களையும் சொல்லட்டும், அவர் (ஷாபி அப்டால்) என்னை அவமானப்படுத்துவார், என்னை சங்கடப்படுத்துவார். சில சமயங்களில் முதலமைச்சராக இருக்கும் தலைவர் என் நிழலுக்கு பயப்படுவதாகத் தெரிகிறது.
“என்னிடம் என்ன இருக்கிறது, நான் வேட்பாளர் அல்ல, நான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை, எந்த பதவியும் இல்லை. எனவே, என்னைப் பற்றி பயப்பட வேண்டாம்” என்று அவர் கூறினார்.
முதலமைச்சர் பதவியை வகித்தபின் ஷாபி, தம்மை குறைக்கூறும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“அவர்கள் ஏதாவது தவறு செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டினால், நான் செய்த நல்ல காரியங்களும் உள்ளன. என்னை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும், சங்கடப்படுத்தவும் வேண்டாம்.
” மக்கள் மகிழ்ச்சியாக இருக்க, சபா செழிக்க, இந்த மாநிலத்தை நல்ல முறையில் ஆளவும்,” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தனது முந்தைய தலைமையின் கீழ் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதற்காக மூசா அமானை ஷாபி அப்டால் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் சாடியிருந்தார்.
“அவர் அதை (ஆட்சி கவிழ்ப்பை) கெடாவைப் போலவும், மலாக்காவைப் போலவும், ஜோகூரைப் போலவும் நினைத்து விட்டார். நம்பிக்கைக் கூட்டணி அங்கு விழக்கூடும்”
“இது கெடா அல்ல, இது மலாக்கா அல்ல, இது ஜோகூர் அல்ல. இது சபா!” என்று நேற்று லிடோ பிளாசாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசினார்.
முன்னாள் சபா முதல்வரிடம் அதிகாரத்தை ஒப்படைக்க விரும்பாததால், கடந்த மாதம் தாம் சபா மாநில சட்டமன்றத்தை கலைக்க முடிவு செய்ததாக ஷாபி கூறினார்.
மூசா மேற்கொண்ட சதி முயற்சிக்கு தீபகற்பத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஆதரவளித்ததாக அவர் கூறினார். சபா மக்களுக்கு வாக்களிக்கும் அதிகாரத்தை திருப்பித் தருவதாக தாம் சட்டமன்றத்தைக் கலைத்ததாக ஷாபி கூறினார்.
தமக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி மூசா அமான் அரசியல் நகர்வை ஏற்படுத்த நினைத்த போது, தாம் இன்னும் சபா மாநிலத்தின் முதல்வர் என்றும், சபா மாநில சட்டமன்றத்தை கலைக்கக் கோரி தாம் மாநில ஆளுநரிடம் கோரியுள்ளதாகவும் அறிவித்து, மாநில சட்டமன்றத்தைக் கலைத்தார்.
மாநில ஆளுநர் சட்டமன்றத்தைக் கலைப்பதற்கு அனுமதி அளித்ததாக ஷாபி தெரிவித்திருந்தார். ஆயினும், மூசா அமான் தரப்பு ஷாபி அப்டாலும், ஆளுநரும் இணைந்து சதியை மேற்கொண்டுள்ளனர் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அவ்வழக்கும் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு இப்போது சபா மாநிலத்தில் தேர்தல் வருகிற செப்டம்பர் 26 நடைபெற உள்ளது.