சென்னை:கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் எங்கும் பரவியிருக்கும் இந்தியர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, காலமெல்லாம் கானம் பாடி மகிழ்வித்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
கொவிட்-19 தொற்று உள்ளிட்ட வேறு சில உடல்நலக் கோளாறுகளுடன் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாகப் போராடி வரும் எஸ்.பி.பாலா தற்போது உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தனது உடல் நலத்துக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
கமல்ஹாசன் மருத்துவமனை வந்தார்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை மெல்ல மெல்ல மீட்சியடைந்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிருவாகம் நேற்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 24) இரவு நடிகரும், மக்கள் நீதிமய்யத் தலைவருமான கமல்ஹாசன் மருத்துவமனைக்கு பாலசுப்பிரமணியத்தைப் பார்க்க வந்தார்.
பார்த்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசனை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு விசாரித்தபோது, “அவர் நன்றாக இருக்கிறார் என்று கூற முடியாது. மிக அபாயகரமான கட்டத்தில் இருக்கிறார். உயிர்காக்கும் கருவிகளின் உதவியோடு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
எஸ்.பி.பாலாவின் மகன் எஸ்.பி.பி.சரண் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியிட்ட காணொலி ஒன்றில் தனது தந்தையின் உடல்நலம் தேறிவருவதாகத் தெரிவித்திருந்தார்.
பாலசுப்பிரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
சமூக ஊடகங்களில் தனது தந்தையின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சரண் அண்மையில் காணொலி வழி நன்றி தெரிவித்திருந்தார்.