மும்பை, ஏப்ரல் 16- இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டமும், கேன்ஸ் திரைப்பட விழாவும் பிரெஞ்சு அரசாங்கத்தால் இந்த வருட இறுதியில் கொண்டாடப்பட உள்ளன.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க நடிகை ஐஸ்வர்யா ராய் அழைக்கப்பட உள்ளார். சென்ற வருடம், அவருடைய பிறந்த நாளின்போது பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு தங்கள் நாட்டின் சிறந்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதினை அளித்து கவுரவித்தது.
இது குறித்து பிரான்சின் இந்தியத் தூதுவரான பிரான்க்காய்ஸ் ரிச்சியர் கூறுகையில், ஐஸ்வர்யா ராய், கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்குகொள்வதன் மூலம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆகிவிட்டார்.
வரும் திரைப்பட விழாவில், இந்திய சினிமா குறித்து எங்களின் கவனம் இருக்கும். அதற்கு இந்திய திரை உலகத்தினர் அழைக்கப்படுவர் என்றும் ஐஸ்வர்யா ராயும் சிறப்பு அழைப்பினைப் பெறுவார் எனவும் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
பிரெஞ்சு அழகு சாதனப்பொருள் குறித்த விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காலத்தில் இருந்தே ஐஸ்வர்யாவின் பிரான்ஸ் தேசத் தொடர்பு இருந்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.