Home One Line P1 வரவு செலவு திட்டம் : “அம்னோவினர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க அனுமதி  வழங்குங்கள்”

வரவு செலவு திட்டம் : “அம்னோவினர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க அனுமதி  வழங்குங்கள்”

572
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த வாரத்தில்  தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அந்த வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத  அம்னோ உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க அனுமதி  வழங்கப்பட வேண்டும் என அம்னோ உதவித் தலைவர் காலிட் நோர்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார்


தொடர்புடைய செல்லியல் காணொலி :


#TamilSchoolmychoice

தற்போது நாடாளுமன்றத்தில் 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை மட்டுமே கொண்டுள்ளார் பிரதமர் மொகிதின் யாசின். நிச்சயமற்ற இந்த சூழ்நிலையில் காலிட் நோர்டின் விடுத்துள்ள அறிக்கை மேலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. மொகிதின் அரசாங்கம் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் மரணமடைந்து விட்டனர் ஒருவர் வாரிசான் சபா கட்சியின் பத்து சாப்பி நாடாளுமன்ற உறுப்பினர் லியூ வுய் கியோங். மற்றொருவர் அம்னோவின் கிரிக் நடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான்.

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கான நலன் பயக்கும் அம்சங்கள் இல்லை எனக் கருதினால் அவர் அந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். கட்சியின் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனசாட்சிப்படி மக்களின் நலன்களுக்காகவும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.  கட்சிக்கு மாறான இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது கட்சிக்கு துரோகம் இழைப்பதாக கருதப்படக் கூடாது” என்றும் காலிட் வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நலனை விட நாட்டு நலனையும் மக்கள் நலனையும் முன் நிறுத்த வேண்டும். இப்போது அம்னோ, பெரிக்கத்தான் நேஷனல் என்னும் தேசியக் கூட்டணியில் அங்கமாக இல்லை என்பதை நாம் உணர வேண்டும்” என்றும் காலிட் மேலும் கூறினார்.

“வரவு செலவுத்திட்டம் மீதான வாக்களிப்பு நடைபெறும்போது அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று ஆதரிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும் அல்லது வாக்களிக்காமல் நடுநிலை வகிக்க வேண்டும். தங்கள் மனசாட்சிப்படி இதனை மேற்கொள்ள வேண்டும்” எனவும் காலிட் தெரிவித்தார்.

காலிட் நோர்டினின் இந்த அறைகூவல் ஏற்றுக் கொள்ளப்பட்டால் வரவு செலவுத்திட்டம் மீதான வாக்களிப்பின் போது சில திருப்பங்கள் ஏற்படலாம். இரண்டு அல்லது மூன்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தாலும்  அல்லது வாக்களிக்காமல் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தவிர்த்தாலும்,  வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் தோல்வியடையும். அதைத்தொடர்ந்து அரசாங்கம் பதவி விலக வேண்டிய நெருக்கடியும் அதிகரிக்கும்.