Home நாடு பி.பட்டு நினைவலைகள் : பள்ளி ஆசிரியர் – பத்திரிகை ஆசிரியர் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்...

பி.பட்டு நினைவலைகள் : பள்ளி ஆசிரியர் – பத்திரிகை ஆசிரியர் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் – ஜனநாயகப் போராளி

673
0
SHARE
Ad
பட்டுவின் நினைவாக சாலை ஒன்றுக்குப் பெயர் சூட்டப்பட்ட நிகழ்ச்சியின்போது…

(ஜனநாயக செயல் கட்சியின் வழி நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளின் மூலம் மக்கள் சேவையாற்றி இன்றுவரை பலரின் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து வருபவர் பி.பட்டு. இன்று ஜூலை 12 அவரின் நினைவு நாள். அதனை முன்னிட்டு அவரின் நினைவுகளையும், அரசியல் பங்களிப்பையும் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் எழுத்தாளர் நக்கீரன் எழுதியிருக்கும் இந்த சிறப்புக் கட்டுரை இடம் பெறுகிறது)

பிள்ளைப் பூச்சியை, தன்னை அறியாமலேயே மடியில் கட்டிக் கொண்டு வாழ்ந்தார் ஓர் அரசியல் தலைவர்; நாடாளுமன்றத்தில் சிங்கமென கர்ஜனை புரிந்த பி.பட்டுதான் அவர்.

மலேசிய அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தின் ஒற்றர் என்பதை அறியாமலேயே அவரை தன் ஓட்டுநராக அமர்த்திக் கொண்ட அரசியல் தலைவர் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

நாடாளுமன்றப் பணி, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு, ஜனநாயக அரசியல் கட்சி (ஜசெக)யின் பரபரப்புமிக்க தேசிய செயலாளர் பதவி, கட்சியின் மாத ஏடான ரோக்கெட் – பத்திரிகையில் ஆசிரியர் என்றெல்லாம் அதிகமான பொறுப்புகளை சுமந்ததால் அவருக்கு வாகன ஓட்டுநர் தேவை என்பதை உணர்ந்த ஜசெகவின் தேசியத் தலைமை அதற்கு ஒப்புதல் அளித்தது.

#TamilSchoolmychoice

இதை, வகையாக மோப்பம் பிடித்துவிட்ட அன்றைய மத்தியக் கூட்டரசின் உளவுப் பிரிவு, சாமர்த்தியத்திலும் நடிப்பிலும் கைதேர்ந்த தன் உறுப்பினர்களில் ஒருவரை பட்டுவிடம் ஓட்டுநர் வேலை கேட்டு அனுப்பியது. சம்பந்தப்பட்டவரின் பணிவு, காலம் கருதாத பணி, உறுதுணை, ஒத்திசைவான அணுகுமுறை உள்ளிட்ட அனைத்தையும் நம்பி அவரை நம்பிக்கைக்கு உரிய ஓட்டுநராகவேக் கருதி செயல்பட்டு வந்துள்ளார், பட்டு.

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு முகாமில் இருந்தபொழுது, அவரிடம் ஒட்டுநராக இருந்தவர் மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து அங்கு நடமாடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாராம் பட்டு.

ஜனநாயகக் கட்சியில் ஈடுபாடு கொண்ட பட்டு

மஇகாவுக்கு அடுத்து மலேசிய வாழ் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அதிகமாக உறுப்பியம் பெற்றுள்ள கட்சிகளில் ஜசெக, குறிப்பிடத்தக்கது. மலாயாவுக்கு சுதந்திரம் கிடைத்து எட்டு ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கப்பட்ட ஜசெக, அடுத்த நான்கு ஆண்டுகளிலேயே மிகப்பெரிய ஜனநாயக வெற்றியை நாட்டின் பொதுத் தேர்தல்களில் ஈட்டியது.

1969-இல் நடைபெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் அக்கட்சிக்கு பதின்மூன்று இடங்களை அள்ளித் தந்தனர். தேர்தல் களம் கண்ட முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது ஜசெக.

சமதரும மக்களாட்சி, ஜனநாயக சமுதாயம், சமூக நீதி – ஆகிய மூன்று கொள்கைகளை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் சின்னமான செவ்வண்ண ஏவுகணை, ‘புதுமை-பொலிவு-முற்போக்கு’ என்னும் முச்சிந்தனையை உள்ளடக்கியது. ஏவுகணையின் அடிப்பகுதியில் உந்து ஆற்றலாக குறிப்பிடப்படும் நான்கு அடையாளங்களும் கட்சிக்கு ஆதாரமாக விளங்குகின்ற மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்களுடன் மற்ற இனத்தவரையும் குறிப்பிடுகின்றன.

இப்படிப்பட்ட ஜசெக-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட பட்டு, தேக்கு மரம் தேக்கி வைத்திருக்கும் உறுதியைவிட அதிக மனவுறுதியைக் கொண்டிருந்தார். தன் உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தான் சார்ந்த இயக்கத்திற்காக ஈகம் செய்த அவர், ஜசெக-வில் இணைந்த குறுகிய காலத்திலேயே கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் ஆனார்.

ஜசெக-வின் மாத ஆங்கில இதழான ‘ரோக்கெட்’டின் ஆசிரியராக விளங்கிய பட்டு, 1978-இல் லிம் கிட் சியாங்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். பின் விடுவிக்கப்பட்டார். மீண்டும் 1987-இல் ‘ஓப்ராசி லாலாங்’ என்ற நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டு கமுந்திங் தடுப்பு முகாமில் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

மலாய், ஆங்கிலம், தமிழ் மொழிகளுடன் சீன மொழியிலும் சிறந்த ஆளுமையைக் கொண்டிருந்த பட்டு, பேராக் மாநில சட்டமன்றத்திற்கு கோப்பெங் தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982-இல் மெங்கெளும்பு (பேராக்) தொகுதியில் இருந்தும் 1986-இல் பாகான் (பினாங்கு) தொகுதியிலிருந்தும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாமிவேலுவை எதிர்த்து 2 முறை போட்டி

1974 பொதுத்தேர்தலில் சாமிவேலு முதன் முதலில் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து ஜசெகவின் சார்பில் போட்டியிட்டவர் பி.பட்டு. அப்போது, மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் – 644 வாக்குகள் வித்தியாசத்தில் – சாமிவேலுவிடம் தோல்வி கண்டார் பட்டு.

1990-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் துன் ச.சாமிவேலுவை எதிர்த்து மீண்டும் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பி.பட்டு போட்டியிட்டபோது மீண்டும் பரபரப்பானது அந்த நாடாளுமன்றத் தொகுதி. எனினும் இந்த முறையும் சாமிவேலுவை, பட்டு தோற்கடிக்க முடியாமல் போனது.

ஆசிரியர் பணியிலிருந்து அரசியல்வாதி பணிக்கு…

1971-இல் ஜசெக-வில் இணைந்த பட்டு, தன் ஆசிரியர் தொழிலில் தொடர்ந்து வந்தார். ஆனாலும், அரசியல் பணி பளுவினால் 1973-இல் அப்பணியில் இருந்து விலகி, முழுநேர அரசியல்வாதி ஆனார்.

பட்டு, தன் அரசியல் பயணத்தில் தேர்தல் களத்தில் கண்ட வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு, அடுத்தக் கட்டத்திற்கு நகரும் தன்மையைக் கொண்டிருந்தார். காலமெல்லாம் கட்சி-தொண்டு என்றே சுழன்று வந்த பட்டு, இடையிடையே கடுமையான சிறைவாசத்தையும் எதிர்கொள்ள நேர்ந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டடு, 1995 ஜூலை 12-இல் தன் வாழ்க்கைப் பயணம்-அரசியல் பயணம் இரண்டையும் ஒருசேர நிறுத்திக் கொண்டார்.

நலிந்த மக்களின்பால் கரிசனம் கொண்டிருந்த பட்டு 48 வயதிலேயே மறைய நேரிட்டது துயரமானதுதான். குறிப்பாக, அவர் பெரிதும் விரும்பிய அரசியல் மாற்றம், ஜனநாயக மறுமலர்ச்சி எதையும் காணாமல் மறைந்த பட்டுவிற்கு இந்த ஜூலை 12, 26-ஆவது நினைவு நாள்.

தொடரும் பட்டுவின் அரசியல் பாரம்பரியம்

பட்டுவின் மூத்த மகள் கஸ்தூரி (படம்), அவரின் அரசியல் வாரிசாகவும் இன்று ஜசெகவில் நீடிக்கிறார்.

இன்றைய நாளில், அப்பாவைப் பற்றிய எண்ணமெல்லாம் மனம் முழுக்க நிறைந்துள்ளது என்று சொன்ன கஸ்தூரி, மலேசிய நாடாளுமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டுவின் வாரிசாக மலேசிய அரசியல் வானில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

“அரசியல் பள்ளியில் என் தந்தை எனக்கு வகுப்பாசிரியர் என்றால், லிம் கிட் சியாங் தலைமை ஆசிரியர். என் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்; நான் சுவாசிக்கும் காற்று அரசியல் காற்று; என் மனம் முழுக்க அரசியல் சிந்தனை. எனவே, என் தந்தை வகுத்துத் தந்த பாதையில் என் அரசியல் பேராசான் லிம் கிட் சியாங் வழிகாட்டுதலில் என் அரசியல் பயணமும் வாழ்க்கையும் ஒருசேரத் தொடர்கிறது” என்று தந்தையின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது மேலும் குறிப்பிட்டார் கஸ்தூரி.

ஜசெகவின் ஆட்சியில் பினாங்கில் பட்டுவின் பெயரில் ஒரு சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

செபராங் பிறை பட்டர்வொர்த்தில் ஜாலான் மாக் மண்டினையும் லோரோங் பூங்கா தஞ்சோங்-7ஐயும் இணைக்கும் ஜாலான் பட்டுவை 2011 ஜூலை 31-ஆம் நாளில் பினாங்கின் அப்போதைய முதல்வர் லிம் குவான் எங் தொடக்கி வைத்தார்.

பட்டுவின் அரசியல் பங்களிப்பும், மலேசிய இந்தியர்களுக்கான உரிமைக் குரலாகவும், போராட்டக் குரலாகவும் ஒலித்த அவரின் சேவைகளும் ஜசெக என்ற அரசியல் கட்சியின் எல்லைக் கோடுகளையும் கடந்து மலேசியர்களின் – மலேசிய இந்தியர்களின் மனங்களில் இன்றளவும் பதிந்திருக்கின்றன.

அதனால்தான், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பலராலும் நினைவு கூரப்படுகின்றார்.

-நக்கீரன்