Home Uncategorized இஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத துங்கு ரசாலி ஹம்சா!

இஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத துங்கு ரசாலி ஹம்சா!

723
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த பிரதமராகத் தேர்வு பெற அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சாப்ரிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சிகளின் கணக்குப்படி பார்த்தால் அவருக்கு 115 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், 114 வாக்குகள்தான் கிடைத்திருக்கின்றன. அப்படியானால் இஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத அந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதற்கான விடையும் இன்று கிடைத்திருக்கிறது.

ஆம்! குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சாதான் அவர்!

இன்று வியாழக்கிழமை இஸ்மாயில் சாப்ரியை ஆதரித்த 114 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாமன்னர் அரண்மனைக்கு அழைத்திருக்கிறார். அவர்களின் தேர்வை மறு உறுதிப்படுத்த அவர்களோடு குழுக் குழுவாக சந்திப்பும் நடத்துகிறார்.

ஆனால் துங்கு ரசாலி ஹம்சா மாமன்னரால் அழைக்கப்படவில்லை. இதிலிருந்து அவர் இஸ்மாயில் சாப்ரிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பது உறுதியாகியிருப்பதாக ஊடகங்கள் கணித்துள்ளன.

மாமன்னர் அழைத்துள்ள 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்று புதன்கிழமை மாலை 4.00 மணிக்குள் மாமன்னர் கேட்டுக் கொண்டபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பிரதமர் தேர்வைச் சமர்ப்பித்துள்ளனர்.

இஸ்மாயில் சாப்ரி 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருப்பது உறுதியாகியிருக்கிறது. அவரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை அரண்மனைக்கு அழைத்திருக்கிறார் மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா.

அவர்களைத் தனித் தனியாகவோ, குழுவாகவோ சந்தித்து அவர்கள் ஆதரவுக் கடிதம் வழங்கியிருப்பதை மாமன்னர் உறுதிப்படுத்தவிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண ஆவணங்களில் கண்டுள்ள விவரங்களையும் மாமன்னர் மறுஉறுதிப்படுத்தவிருக்கின்றார்.

வெவ்வேறு நேரங்களில் 5 குழுக்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களை மாமன்னர் சந்திக்கின்றார்.

சரவாக்கின் ஜிபிஎஸ் கூட்டணி, பெர்சாத்து கட்சி, ஆகியவற்றின் 24 நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 10.00 மணிக்கு மாமன்னர் சந்திக்கிறார்.

பெர்சாத்து, அம்னோ மற்றும் 3 சுயேச்சை நாடாளுமன்ற  உறுப்பினர்களைக் கொண்ட 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை காலை 11.10 மணிக்கு மாமன்னர் சந்திக்கவிருக்கிறார். இந்தக் குழுவில் பதவி விலகும் மொகிதின் யாசின், நஜிப் துன் ரசாக், அஸ்மின் அலி தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், கைரி ஜமாலுடின் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

மூன்றாவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு மாமன்னரை பிற்பகல் 2.00 மணிக்கு சந்திக்கிறது. இதில் பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரி இடம் பெற்றிருக்கிறார். மேலும் 25 பேர் கொண்ட இந்தக் குழுவில் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்சா சைனுடின் ஆகியோர் உள்ளிட்ட அம்னோ, பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

4-வது குழு பிற்பகல் 3.10 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கின்றது. இதில் மசீச தலைவர் வீ கா சியோங், மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன், அம்னோவின் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் ஆகியோர் அடங்கியிருக்கின்றனர்.

5-வது குழு மாலை 4.20 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கிறது. இதில் பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.