Home நாடு அசாலினாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற அவையின் புதிய துணைத் தலைவர் யார்?

அசாலினாவுக்குப் பதிலாக நாடாளுமன்ற அவையின் புதிய துணைத் தலைவர் யார்?

491
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோவைச் சேர்ந்த அசாலினா ஒத்மான் சைட் நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அசாலினா ஜோகூர் பெங்கெராங் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் நியமிப்பாரா?

#TamilSchoolmychoice

அல்லது மீண்டும் அம்னோவைச் சேர்ந்தவரையோ, தேசியக் கூட்டணியைச் (பெரிக்காத்தான் நேஷனல்) சேர்ந்தவரையோ  நியமிப்பாரா? என அரசியல் பார்வையாளர்கள் காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்பவர் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற அவையின் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு பிரதமர் ஒருவரை முன்மொழிந்தாலும் அவரை நாடாளுமன்றத்தில் மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் முன்மொழியப்பட்ட நபர் அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது.

எனவே, எதிர்க்கட்சிகளுடன் நல்லிணக்கம் காட்டும் நோக்கில் பக்காத்தான் கூட்டணியிலிருந்து ஒருவரையே இஸ்மாயில் சாப்ரி நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக நியமிக்க முன்வரக் கூடும்.

நாடாளுமன்ற அவையின் இரண்டு துணைத் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன். அவையின் இரண்டு துணைத் தலைவர்களில் ஒருவரான அசாலினா விலகிவிட, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த முகமட் ரஷிட் ஹாஸ்னோன் இன்னும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் நாடாளுமன்ற அவையின் தலைவராக இருக்கும் அசார் அசிசான் ஹாருணுக்கு எதிராக, அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் முன்மொழியப்பட்டிருக்கின்றன.