Home நாடு “அமைச்சர் ஹாலிமா, மித்ரா குறித்த தவறாக தகவல்களை வழங்கியிருக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்!

“அமைச்சர் ஹாலிமா, மித்ரா குறித்த தவறாக தகவல்களை வழங்கியிருக்கிறார்” – வேதமூர்த்தி கண்டனம்!

806
0
SHARE
Ad

 

  • சமுதாய முன்னேற்றத்துக்கான செலவுகள் கடனா?
  • இந்தியர்களை கேவலப்படுத்தியுள்ளார் ஹலிமா
  • சாடுகிறார் முன்னாள் அமைச்சரும், மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவருமான பொன்.வேதமூர்த்தி

கோலாலம்பூர்: ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சரும் இந்தியர் விவகாரங்களுக்கான ‘மித்ரா’வை பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சிக் காலத்தில் நிருவகித்தவருமான பொன்.வேதமூர்த்தி, தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பொய்த் தகவலை வழங்கி அவதூறு பரப்பியதாக ஒற்றுமைத் துறை இந்நாள் அமைச்சர் ஹலிமா சாடிக்கை கடுமையாகச் சாடினார்.

#TamilSchoolmychoice

சட்ட நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் நாடாளுமன்ற சிறப்பு அந்தஸ்துக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாமல் அதே வார்த்தைகளை நாடாளுமன்றத்திற்கு வெளியே, தாமதிக்காமல் உடனே சொல்ல முடியுமா என்று ஹலிமாவிற்கு பொன்.வேதமூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

ஹாலிமா சாதிக்

மித்ரா-விற்கு பொறுப்பு வகிப்பவருமான அமைச்சர் ஹலிமாவின் கூற்று பொய்த் தகவலைக் கொண்டுள்ளதுடன், முன்னாள் அமைச்சரான தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் தீய நோக்கத்தையும் கொண்டுள்ளது என்று வேதமூர்த்தி சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சொன்ன பொய்யான, தீய நோக்கமுடைய கடுங்குற்றச்சாட்டை, ஹலிமா நாடாளுமன்றத்திற்கு வெளியில் தாமதிக்காமல் உடனே தெரிவிக்கும்படி பொன்.வேதமூர்த்தி சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறினால், நாடாளுமன்றத்திலும் மலேசிய இந்தியர்களிடமும் தவறான தகவலை வழங்கியதற்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.

12-ஆவது மலேசியத் திட்டம் குறித்த நிறைவுரையின்போது பேசிய அமைச்சர் ஹலிமா, பொன். வேதமூர்த்தி வரம்பை மீறி செலவு செய்ததாகவும் 2020, 2021-ஆம் ஆண்டுகளுக்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தியதாகவும் இதனால் இந்திய சமுதாயத்திற்கு தன்னால் அதிகமாக செய்ய முடியவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், பொன்.வேதமூர்த்தி மித்ரா-விற்கு பெருங்கடனை ஏற்படுத்திவிட்டார் என்றும் ஹலிமா தெரிவித்த தகவலை இணைய ஊடகமான ‘ஃப்ரீ மலேசியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

மித்ரா தன்னுடைய பொறுப்பின்கீழ் இருந்தபொழுது ஆண்டுக்கு 100 மில்லியன் ஒதுக்கப்பட்டது. அதேவேளை, இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியபோது, தலைமை கணக்குத் தணிக்கையாளர் (auditor general}அலுவலத்தின் சார்பில் முந்தைய தேசிய முன்னணி ஆட்சியில் ஓர் இந்திய அமைச்சர் மற்றும் இரு துணை அமைச்சர்களின் மூலம் செடிக் நிதி பெரிய அளவில் எப்படியெல்லாம் தவறாக கையாளப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

“என்னுடைய தலைமையில் இந்திய இளைஞர்கள், தனித்து வாழும் தாய்மார் ஆகிய தரப்பினருக்கு தொழில்திறன் பயிற்சி, அதிக வருமானத்திற்கான வேலை வாய்ப்பு, நவீன டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான தளம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு குறுகிய மற்றும் நீண்டகால பயிற்சித் திட்டங்கள் வகுக்கப்பட்டன. சுமார் 200 திட்டங்கள் கவனமாக தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்காக 2019 அக்டோபர் 16ஆம் நாள் நிலவரப்படி வெ.95,743,557.20 ஒதுக்கப்பட்டது.” என்று பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.

அதே சமயம், திட்டங்கள் தோல்வி அடையாமல் இருக்கவும் நிதி பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை நிலவவும், மூன்று கட்ட நிதி ஒதுக்கீட்டு முறை எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டம் நிறைவுக் கட்டத்தை எட்டிய பின்னர்தான் மூன்றாம் கட்ட நிதிக்கு அனுமதி அளிக்கப்படும்.

2020 ஆம் ஆண்டுக்கு அங்கீகரிக்கப்பட்ட 100 மில்லியனைக் குறைக்க வேண்டிய அவசியமின்றி இதற்கான நிதி 11-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட 500  மில்லியன் ரிங்கிட் உச்சவரம்பிற்கு உட்பட்டு பயன்படுத்தப்படும். எனவே, ஹலிமாவின் குற்றச்சாட்டு அடிப்படை இல்லாதது என்று பொன்.வேதமூர்த்தி விளக்கம் அளித்தார்.

மித்ராவை நான் கடனின் வைத்ததாக தவறாகக் குறிப்பிடும் ஹலிமாவிற்கு விவரம் போதவில்லை. சமூகத்தின் பொருளாதார மீட்சிக்கான மேம்பாட்டுச் செலவை எப்படி கடன் என்று வகைப்படுத்த முடியும்?
|
சமூகத்திற்கான முதலீட்டாகவே அது கருதப்படும்.

இந்தியர்களுக்காக செலவிட்டதால் மித்ரா கடன் நிலைக்கு உள்ளானதாக கூறி ஹலிமா, இந்தியர்களை கேவலப்படுத்துகிறார்.

ஒரு காசைக் கூட நான் வரம்பு மீறி செலவழிக்கவில்லை. இதன் தொடர்பான என் பதில் யாவும் இன்னும் நாடாளுமன்றக் குறிப்பில் இருப்பதால், ஹலிமா அவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று பொன்.வேதமூர்த்தின் வெளியிட்டுள்ள  அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்