Home உலகம் உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி – போர் யாருக்கு சாதகமாக முடியும்? (பகுதி –...

உக்ரேன்– ரஷ்யா மோதல்கள்: வரலாற்றுப் பின்னணி – போர் யாருக்கு சாதகமாக முடியும்? (பகுதி – 4 நிறைவு)

588
0
SHARE
Ad

(உக்ரேன்– ரஷ்யா இடையிலான போர் கடந்த வியாழக்கிழமை பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ரஷியப் படைகளின் தாக்குதலோடு தொடங்கி விட்டது. இந்த இருநாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் என்ன? வரலாற்றுப் பின்னணிகள் என்ன? போரினால் யாருக்கு சாதகம்? ரஷியா பொருளாதாரம் மோசமாகுமா? தனது பார்வையில் விவரிக்கிறார் இந்த 4-வது நிறைவுப் பகுதியில் இரா.முத்தரசன். இந்தக் கட்டுரையின் முதல் பகுதி பிப்ரவரி 27  அன்றும் 2-வது பகுதி பிப்ரவரி 28 அன்றும், இதன் 3-வது புகுதி மார்ச் 2 -ஆம் தேதியன்றும் செல்லியலில் இடம் பெற்றன)

  • உக்ரேய்ன் – ரஷியா போர் வெடித்தது! இராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!
  • 2-ஆம் உலகப் போருக்குப்  பின்னர் இலட்சக்கணக்கான அகதிகள் ஐரோப்பாவில் உருவாகும் அவல நிலை
  • பொருளாதார பாதிப்புகள் ரஷியாவை முடக்குமா?
  • போர் இறுதியில் யாருக்கு சாதகமாக அமையும்?

உக்ரேய்ன் – ரஷ்யா இடையிலான பிரச்சினைகளின் வரலாற்றுப் பின்னணியை நிறைவு பகுதியாக நாம் விவரித்துக் கொண்டிருக்கும் வேளையில் உக்ரேய்ன் வானில் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கிறது.

டோனெட்ஸ்கோ – லுஹான்ஸ்க் பகுதிகளை சுதந்திர  நாடுகளாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி அந்தப் பிரதேசங்களைப் பாதுகாக்க அறிவித்த அடுத்த நாளே, ரஷ்யா தனது ராணுவத்தை அங்கே களமிறக்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

தனது இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் பாதுகாப்புக்காக என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தனது செயலைத் தற்காத்திருக்கிறார்.

இரண்டு தரப்பிலும் ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இராணுவத்தினருடன், பொதுமக்களும் மடிந்திருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள், சுரங்கப் பாதை இரயில் நிலையங்களில் பாதுகாப்புக்காக தஞ்சமடைந்திருக்கின்றனர்.

மேலும் ஆயிரக்கணக்காணோர் குடும்பம், குழந்தைகளுடன் வெளியேறி, அண்டை நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகத் தொடங்கியிருக்கின்றனர்.

உக்ரேனின் சுரங்க இரயில் பாதை நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கும் பொதுமக்களில் ஒருவருக்கு குழந்தை பிறந்தபோது….

இரு நாடுகளுக்கிடையிலான மோதல்கள் இந்த அளவு  உச்சகட்டத்தை அடைந்திருப்பதற்கான பின்னணிக் காரணங்களையும் அதற்கு வித்திட்ட கடந்த கால சம்பவங்களை கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

உக்ரேய்ன்நேட்டோவில் இணைய முனைந்ததால் எழுந்த பிரச்சனை

2014ஆம் ஆண்டில் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொண்டதை முந்தையக் கட்டுரையில் விளக்கியிருந்தோம்.

இதைத் தொடர்ந்து உக்ரேய்ன் தனது பாதுகாப்புக்காக  நேட்டோ நாடுகள் மன்றத்தில் இணைந்து கொள்ள முனைந்தது. நேட்டோ என்பது ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ உடன்பாட்டின் அடிப்படையில் உருவான கூட்டமைப்பாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய  நாடுகளின் பாதுகாப்புக்காக  அமெரிக்கா உருவாக்கிய அமைப்புதான் நேட்டோ.

இன்றும் குறிப்பாக ஜெர்மனி, போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கான அமெரிக்க ராணுவத்தினர்  பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேட்டோ அமைப்பில் உக்ரேய்ன் இணைவதை ரஷ்யா தனது பாதுகாப்புக்கான மிரட்டலாக கருதியது.

ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் கொண்ட எல்லையைக்  தன்னுடன் கொண்டிருக்கும் உக்ரேய்ன் நாட்டில் நேட்டோ படைகள் முகாமிட்டால் ராணுவ ரீதியாக தனக்கு  மிரட்டல் என்பதை ரஷியா உணர்ந்தது.

புடினுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன்

போர் என்று வந்தால் உக்ரேய்ன் மூலம் மிக எளிதாக நேட்டோ நாடுகள் ரஷ்யா மீது படையெடுக்கவும், ரஷியப் பிரதேசங்களில் நுழையவும் முடியும். அந்த வட்டாரத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் எனவும் ரஷ்யா உணர்ந்து கொண்டது.

உக்ரேய்ன் நேட்டோவில் இணைவதற்கு கடுமையான  எதிர்ப்பை ரஷ்யா தெரிவித்து வந்தது. உக்ரேய்னில் உள்நாட்டுப் பிரச்சினையை உருவாக்க ’டோன் பாஸ்’ பிரதேசத்தில் (வரைபடம் பார்க்கவும்)  உள்நாட்டுக் கலவரத்தை ரஷ்யா தூண்டிவிட்டது.

டோன்பாஸ் என்பது கிழக்கு உக்ரேனில் ரஷியாவின் எல்லைப் பகுதியில் உள்ள டோனெட்ஸ்கோ – லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும்.

இந்தப் பகுதிகளில் பாரம்பரிய வரலாற்றுக்  காரணங்களுக்காக அதிகமான அளவில் ரஷ்யர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு அதிகமாகப் பேசப்படும் மொழியும் ரஷ்யா மொழிதான்.  இந்த அம்சம் ரஷ்யாவுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது.

டோன் பாஸ் என அழைக்கப்படும் பிரதேசங்கள்

இவர்கள் இடையே பிரிவினை மோகத்தைத் தூண்டிவிட்டு   அங்கு கிளர்ச்சியாளர்கள் குழுவுக்கு ரஷ்யா ராணுவ ரீதியான  ஆதரவை வழங்கி வந்தது.

நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் உக்ரேய்னின் மொத்த மக்கள் தொகையில் 17 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யா வம்சாவளியினர் என்பதாகும்.

உக்ரேய்னிய மக்கள் 77 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். ரஷியர்கள் இரண்டாவது பெரிய இனக் குழுவாக உக்ரேனில் வாழ்கின்றனர். மற்ற நாட்டினர் மிகச் சொற்பமான விழுக்காட்டில் உக்ரேய்னின் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், உக்ரேய்ன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டது. அதற்கான  வணிகக் கட்டுப்பாடுகளற்ற பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டில் 2016-இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரேய்ன் கையெழுத்திட்டது.

அதைத் தொடர்ந்து 2017-இல் குடிநுழைவு அனுமதி (விசா) இன்றி உக்ரேய்னிய மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செல்ல ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது.

உக்ரேய்ன் : ஏழ்மையும்இராணுவ பலமும் இணைந்த நாடு

ஐரோப்பிய நாடுகளிலேயே உக்ரேய்ன் தான் மிகவும் ஏழ்மையான நாடு.

அதற்கு முக்கிய காரணங்களுக்குள் ஒன்று அங்கு தொற்று நோய் போல் பரவியிருக்கும் ஊழல்களாகும்.

இருப்பினும், வளமான  மிகப் பரந்த அளவிலான விவசாய  நிலங்களை உக்ரேய்ன் கொண்டிருக்கிறது.

உலகின் மிக அதிகமான தானிய உற்பத்தி நாடாக உக்ரேய்ன் திகழ்கிறது.

ராணுவ பலத்திலும் யாருக்கும் சளைத்ததல்ல உக்ரேய்ன்!

ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளை அடுத்து மூன்றாவது பெரிய  ராணுவ பலத்தை உக்ரேய்ன் கொண்டிருக்கிறது.

2014-இல் அதிபர் யானுகோவிச் நாட்டை விட்டு  வெளியேறிய பின்னர் உக்ரேய்ன் அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோ போரோஷெங்கோ 2019 வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரேய்னின் அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கும் நேட்டோ நாடுகளின் ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கும் அந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வழிகோலியது.

அதே ஆண்டு ஜூலை மாதத்தில் அதிபர் தேர்தலில்  வோலோடிமிர் செலென்ஸ்கி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று வரை அவரே அதிபராகவும் தொடர்கிறார்.

ரஷ்யாவின் போர் முழக்கம்

ரஷிய அதிபர் – விளாடிமிர் புடின்

இந்த சூழ்நிலையில் உக்ரேய்ன் நேட்டோவில் இணையக் கூடாது என பலமுறை ரஷ்யா எச்சரிக்கை விடுத்து வந்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும்  அந்த  எச்சரிக்கைகளுக்கு  அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தாலும் ரஷ்யா அதற்காக நேரடி இராணுவ மோதலையோ, ஒரு போரையோ தவிர்க்கவே நினைக்கும் என அந்நாடுகள்  கணித்தன.

ஆனால், புடின் வேறு விதமாக “மாற்றி யோசித்திருக்கிறார்”. துணிச்சலுடன் உக்ரேய்னின் கிழக்குப் பிரதேசங்களை தனி நாடுகளாக அறிவித்துவிட்டு அடுத்த நாளே அங்கு ராணுவத்தை அனுப்பி வைத்துவிட்டார்.

இப்படி நடக்கலாம் என அமெரிக்கா முன்கூட்டியே எச்சரித்திருந்திருந்தது. இருந்தாலும்  அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வண்ணம் தனது முதல் ராணுவ நடவடிக்கையை புடின் பிப்ரவரி 24-ஆம் தேதியன்று தொடக்கி வைத்துவிட்டார்.

இந்தப் போர் மூன்றாவது உலகப் போர் எனும் அளவுக்கு விரிவடையுமா? அல்லது ஏதாவது ஒரு ரூபத்தில்  சம்பந்தப்பட்ட நாடுகள் சமாதானமாகிவிடுமா? என்பதை அனைத்துலக சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

காரணம், இன்றைய உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. உலகில் எந்த மூலையில் ஒரு பிரச்சனை நிகழ்ந்தாலும், போர் ஏற்பட்டாலும் அதனால் மற்ற நாடுகள் பாதிப்படைகின்றன.

ஐக்கிய நாடுகள் மன்றம் ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை 141 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றியிருக்கிறது.

அமெரிக்கா அடுத்து என்ன செய்யப் போகிறது?

நேட்டோ நாடுகள் தங்களின் ராணுவப் படையினரை இப்போதைக்கு உக்ரேய்னுக்கு அனுப்பப் போவதில்லை என  அறிவித்துவிட்டன. உக்ரேய்னின் உள்நாட்டுப் பிரச்சினையை அந்நாட்டு ராணுவமே கையாளும் என நேட்டோ அறிவித்திருக்கிறது.

எனவே, உடனடியாக அமெரிக்கா-ரஷியா-நேட்டோ- இடையிலான ராணுவ மோதல்கள் ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பில்லை.

உக்ரேய்னில் தற்போது அவசர கால சட்டத்தை அரசாங்கம் பிறப்பித்திருக்கிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான அனைத்துலகப் பொருளாதாரத் தடைகளை  அமல்படுத்துவோம் என அறிவித்திருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டார்கள். ரஷியாவின் அனைத்துலக வங்கிப் பரிவர்த்தனைகள் முடக்கப்பட்டிருக்கின்றன.

ரஷியாவும், உக்ரேனும் பெலாரஸ்-போலந்து நாட்டின் எல்லையில் போர்நிறுத்த அமைதிப் பேச்சுகளை நடத்தி வருகின்றன.

பொருளாதாரத் தடைகள் ரஷியாவைப் பாதிக்குமா?

பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவுக்கு உண்மையிலேயே பாதிப்பைக் கொண்டு வருமா அல்லது அதை ஒரு கொசுக்கடி போல ரஷ்யா அவற்றை ஒதுக்கித் தள்ளிவிடுமா? என்பது எழும் இன்னொரு கேள்வி!

பொருளாதாரத் தடைகள் என்று வரும்போது அதன்  பாதிப்புகள் உணரப்படுவதற்கும் அனுபவிக்கப்படுவதற்கும் நீண்ட காலம் பிடிக்கும். இதையெல்லாம் கணக்குப் போட்டுத்தான் ரஷியாவும் எதற்கும் துணிந்தவனாக அதிரடியாகத் தான் சொன்னதை செய்து காட்டியிருக்கிறது.

ஆனால், இறுதியில் பொருளாதாரத் தடைகளால் அதிகம் பாதிக்கப்படப் போவது ரஷியாவின் அப்பாவிப் பொதுமக்கள்தான். அங்கு வணிகம் செய்பவர்களும் மிக அதிக அளவில் பாதிக்கப்படுவர், வங்கிப் பரிவர்த்தனை தடைகளால்!

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் அனைத்துலக நட்பு நாடுகளும் இணைந்து பொருளாதாரத் தடைகளை அமுலப்படுத்தத் தொடங்கி விட்டன. ஏறத்தாழ இதுவும் நவீன யுகப் போர் தொடுத்தல்தான்!

இதனால் ரஷியாவுக்கு கண்டிப்பாகப் பெரும்பாதிப்பு ஏற்படும். எத்தனை நாட்களுக்கு ரஷியா தாக்குப் பிடிக்க முடியும் என்பது ரஷிய அரசாங்கத்திற்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.

உடனடியாகத் தங்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துக் கொள்ளும் முடிவை எடுக்குமாறு உக்ரேன் வலியுறுத்தியுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியோடு தங்களால் போரைச் சமாளிக்க முடியும் என உக்ரேன் நம்புகிறது.

நாட்டு மக்களிடம் போர் குறித்து உரையாற்றிய உக்ரேனிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி

உக்ரேனின் நடப்பு அதிபர் செலன்ஸ்கியையும், அரசாங்கத்தையும் வீழ்த்தி விட்டு, நாட்டைக் கைப்பற்றுமாறு புடின் பகிரங்கமாக அறிவிப்பு ஒன்றை விடுத்தார். இராணுவம் இன்னும் செவிசாய்க்கவில்லை.

2014-இல் உக்ரேனில் தன் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி ரஷியாவில் தஞ்சமடைந்த விக்டர் யானுகோவிச்சை மீண்டும் உக்ரேன் அதிபராக்க புடின் முயற்சி செய்கிறார் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

உக்ரேன் மக்களோ, ரஷிய ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். உள்நாட்டு மக்களின் ஆதரவில்லாமல், ரஷியா உக்ரேனில் இராணுவத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்துவதோ, யானுகோவிச் போன்ற பொம்மை பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி செலுத்துவதோ நடப்பில் இயலாத காரியம் என்றே தோன்றுகிறது.

அதே வேளையில், போரை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், நீண்ட காலப் பாதிப்பு ரஷியாவுக்குத்தான். இப்போதே அதன் நாணய மதிப்பு பெருமளவில் சரிந்து விட்டது. இனியும் சரியலாம்.

அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இராணுவ பதிலடித் தாக்குதல்களைவிட பொருளாதாரத் தாக்குதல்கள் அதிகப் பயன்தரும் என நம்புகின்றன.

அதே நேரத்தில் இராணுவத் தற்காப்பு சாதனங்களை உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கத் தொடங்கியிருக்கின்றன.

இப்போதைக்கு  அனைத்துலக சமூகத்தின் பார்வையும்  கவனமும் பதிந்திருப்பது – ரஷியா-உக்ரேய்ன் இடையிலான இந்த நேரடி ராணுவ மோதல்கள், ஐரோப்பாவில்  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இன்னொரு  போரை அமெரிக்கா-நேட்டோ-ரஷியா நாடுகளுக்கிடையில் உருவாக்குமா என்பதுதான்.

-இரா.முத்தரசன்