Home நாடு 15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்த பிரதமருக்கு அம்னோ நெருக்குதல்

15-வது பொதுத் தேர்தல் இந்த ஆண்டில் நடத்த பிரதமருக்கு அம்னோ நெருக்குதல்

486
0
SHARE
Ad
அகமட் மஸ்லான்

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 30) நடைபெற்ற அம்னோவின் 5 உயர்மட்டத் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் – அதைத் தொடர்ந்து நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டம் – ஆகியவற்றின் முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்தார்.

அந்த முடிவைத் தொடர்ந்து மாமன்னரைச் சந்தித்து அடுத்த பொதுத் தேர்தலை நடத்துவதற்கான உத்தேசத் தேதிகளை நிர்ணயிக்க ஆலோசனை பெறுமாறு அம்னோ பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரிக்கு நெருக்குதல் தந்துள்ளது.

எனினும் இது குறித்து பிரதமர் தரப்பில் அறிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை.

மாமன்னரே இறுதி முடிவெடுப்பார்

#TamilSchoolmychoice

வெள்ள அபாயங்களுக்கு மத்தியில் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் அதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராக மாமன்னரே உருவெடுப்பார் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலேசிய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு (40) இன்படி நாடாளுமன்றத் தவணை முடிவுக்கு வருவதற்கு முன்னால் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் முடிவெடுத்தால், அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மாமன்னரைச் சாரும்.

அதைத் தொடர்ந்து அத்தகைய அமைச்சரவை முடிவை நிராகரிக்கும் உரிமை மாமன்னருக்கு உண்டு. இருந்தாலும் அமைச்சரவை முடிவு மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டால் அவர் அதனை நிராகரிக்க முடியாது என்ற இன்னொரு மாறுபட்ட கருத்தும் நிலவுகிறது.

ஆனால், அமைச்சரவையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் தங்களின் அமைச்சர் பதவிகளை இழக்கும் வண்ணம் நாடாளுமன்றக் கலைப்புக்கு ஒப்புக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு மீண்டும் மலேசியர்களைத் தொற்றிக் கொண்டுள்ள நிலையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி உள்ளிட்ட அம்னோவின் 5 மூத்த தலைவர்கள் நேற்று மாலையில் ஒன்றுகூடி அடுத்த பொதுத் தேர்தலுக்கான சாத்தியத் தேதிகளை விவாதித்தனர்.

அதுகுறித்து அவர்கள் ஒருமித்த முடிவொன்றை எடுத்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் சந்திப்பை அடுத்து நேற்று இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர்.