கோலாலம்பூர் : பிரதமராக இருந்தாலும், நிதியமைச்சராக இரண்டாவது இலாகாவை வகிக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் முடிவை பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி இன்று தற்காத்தார்.
இன்று புதன்கிழமை (நவம்பர் 22) மக்களவையில் பேசிய ரபிசி, நிதியமைச்சகத்தை வழிநடத்துவதற்கு அன்வார் சிறந்த தலைவர் என்றும் கூறினார். அரசாங்க கொள்முதல் திட்டங்கள் “உண்மையில் வெளிப்படையானது” என்பதை பிரதமரால் உறுதிப்படுத்த முடியும் என்றும் ரபிசி தெரிவித்தார்.
இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முஹிடின் யாசினின் துணைக் கேள்வி ஒன்றுக்கு ரபிசி பதிலளித்தார்.
மலேசியாவின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் அன்வாரின் திறனில் மக்களும் ஆய்வாளர்களும் நம்பிக்கையுடன் இல்லை என்று முஹிடின் கூறினார். இதன் காரணமாக, அன்வார் நிதியமைச்சரின் பொறுப்பை வேறொரு நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முஹிடின் பரிந்துரைத்தார்.
அதற்கு ரபிசி உடன்படவில்லை. ரபிசியின் கூற்றுப்படி, மலேசியாவின் பொருளாதாரத்தை மறுசீரமைத்து அதன் மீட்சியை நோக்கி செயல்படும் பொறுப்பு முழு அமைச்சரவையின் மீதும் விழுகிறது.
“பொருளாதாரத்தை நிர்வகித்தல் மற்றும் புத்துயிர் பெறுவதற்கான கடமைகள் நிதியமைச்சகம் அல்லது அதன் அமைச்சரின் ஒரே பொறுப்பு அல்ல. இது அனைத்து அமைச்சரவை அமைச்சர்களின் கடமையாகும். உதாரணமாக, தொழிலாளர் சந்தையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் பொருளாதார அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகத்தின் கீழ் உள்ளது, அதே நேரத்தில் நமது நாட்டின் தொழில்துறையை மேம்படுத்தும் பணி முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் உள்ளது” என்று பிகேஆர் துணைத் தலைவருமான ரபிசி சுட்டிக்காட்டினார்.
“மேலும் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய புதிய துறைகளை ஆராய்வதற்காக பணிகள் பொருளாதார அமைச்சர், இயற்கை வளங்கள், எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர், அத்துடன் தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் (டிஜிட்டல்) அமைச்சர் போன்றவற்றின் இலாகாக்களின் கீழ் உள்ளது” என்று ரபிசி மேலும் கூறினார்.
அன்வார் நிதிக் கடமைகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் பொறுப்புகளை ஒப்படைப்பதன் மூலம் அமைச்சுக்களுக்கு மத்தியில் நல்லாட்சியை உறுதிப்படுத்த முடியும் என்றும் ரபிசி கூறினார்.
“இதனால்தான் நிதியமைச்சர் இலாகாவை வகிக்கும் சிறந்த நபர் பிரதமர் என்று நான் நம்புகிறேன்” என ரபிசி தெரிவித்தார்.