கோலாலம்பூர், மே 17 – பொதுத்தேர்தல் முடிவுகளில் திருப்தி இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று புதிதாக பதவி ஏற்றுள்ள உள்துறை அமைச்சர் அகமட் சாகிட் ஹமீடி கூறியதை இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரான கைரி ஜமாலுதீன் தற்காத்து கருத்து கூறியிருக்கிறார்.
அதோடு “அது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல” என்றும் கைரி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறாத நிலையிலும் தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்துள்ளது என்பதனை நியாயப்படுத்தும் நோக்கில் தான் சாகிட் அவ்வாறு கூறியதாக கைரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் “நமது நாடு ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்களின் வாக்குகளை வைத்துத் தான் அரசாங்கத்தை அமைக்க முடியும். அதன் படி தான் தேசிய முன்னணியும் அரசாங்கத்தை அமைத்துள்ளது. எனவே அம்முறைப்படி அமைந்துள்ள தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கைரி கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று உத்துசான் மலேசியா நாளிதழின் தலையங்கத்தில், “பொதுத்தேர்தலில் மகிழ்ச்சி இல்லாதவர்கள் வேறு நாட்டிற்கு புலம் பெயருங்கள்” என்று உள்துறை அமைச்சரான அகமட் சாகிட் ஹமீடி கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.