ஈப்போ, ஜூன் 29 – பேராக் மாநில சட்டமன்ற சபாநாயகராக பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ எஸ்.கே. தேவமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் பேரா சட்டமன்றத்தின் முதலாவது கூட்டத்தில் நடைபெற்ற சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் டத்தோ தேவமணி 31 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில முன்னாள் சட்டமன்ற சபாநாயகருமான வீ. சிவக்குமார் 28 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார்.
அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவிக்கும் போட்டி நிலவிய நிலையில், போத்தோ சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நசாருதீன் ஹஷிம் 31 வாக்குகள் பெற்று துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேவமணி, நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பி.எஸ்.எம் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுமாரிடம் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.