மார்ச் 12 – சற்று முன்பு மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய தற்காப்புத் துறை அமைச்சரும், இடைக்கால போக்குவரத்து அமைச்சருமான, ஹிஷாமுடின் துன் ஹூசேன் ஓன் காணாமல் போன விமானத்தைத் தேடும் விவகாரத்தில், தற்போது தான் ஒருங்கிணைப்பாளராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இனிமேல் தினசரி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தகவல்களை வழங்குவேன் என்றும் ஹிஷாமுடின் (படம்) தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கை சந்திப்பில் ஹிஷாமுடினோடு, விமானப் போக்குவரத்து இலாகாவின் இயக்குநர் டத்தோ அசாருதிருன் அப்துல் ரஹ்மான் மற்றும் மலேசிய விமானப் படையின் தலைவரும், மாஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் கலந்து கொண்டனர்.
தற்போது சுமார் 27,000 சதுர கடல் மைல் வரையில் தேடுதல் பணிகள் விரிவாக்கப்பட்டுள்ளன என்றும் இதில் 12,000க்கும் மேற்பட்ட சதுர கடல் மைல் பகுதி மலாக்கா நீரிணைப் பகுதியைச் சேர்ந்தது என்றும் சுமார் 14,000க்கும் மேற்பட்ட சதுர கடல் மைல் பகுதி தென் சீனக் கடல் பகுதியைச் சேர்ந்தது என்றும் ஹிஷாமுடின் அறிவித்தார்.
இந்தியாவும், ஜப்பானும் தேடுதலில் இணைந்தன
மேலும் தற்போது இந்தியா, ஜப்பான், புருணை ஆகிய நாடுகளும் தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து தேடுதலில் இறங்கியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் இது தவிர போயிங் விமான நிறுவனமும், அமெரிக்காவின் போக்குவரத்து இலாகாவும் உதவிகளை வழங்கி வருவதாகவும் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
ஏராளமாக கூடியிருந்த அனைத்துலகப் பத்திரிக்கையாளர்கள் இந்த பத்திரிக்கை சந்திப்பில் அமைச்சரையும் மற்ற அதிகாரிகளையும் தங்களின் கேள்விகளால் குடைந்தெடுத்தனர். மண்டபம் முழுக்க புகைப்படக்காரர்களும் குழுமியிருந்தனர். ஏறத்தாழ இரண்டரை மணி நேர தாமதத்திற்குப் பின்னரே இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடங்கியது.
சிஎன்என் போன்ற அயல்நாட்டு தொலைக்காட்சி நிலையங்கள் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நேரடியாக ஒளிபரப்பின.
முன்னுக்குப் பின் முரணாக வெளிவந்து கொண்டிருக்கும் தொழில் நுட்ப ரீதியான தகவல்கள் குறித்தும் இந்த பத்திரிக்கை சந்திப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும் அந்த விளக்கங்கள் மேலும் கேள்விகளுக்கு இடமளிக்கும் விதத்திலேயே இருப்பதாகவும் மேலும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.