அமெரிக்கா, ஏப்ரல் 8 – ஆசிய பசிபிக் பிராந்தியங்களில் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் சக் ஹெகல் வரும் திங்கட்கிழமை ஜப்பானிலிருந்து, சீனாவிற்குச் செல்ல உள்ளார்.
அங்கு செல்லும் அவர், சீனக் கடற்படையிடம் உள்ள லியோனிங் என்ற விமானம் தாங்கிக் கப்பலை, பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 1998 ஆம் ஆண்டு உக்ரைனிடமிருந்து பெற்ற இந்த விமானம் தாங்கிக் கப்பலை, சீனா மறுவடிவமைப்பு செய்து, 2012 ஆம் ஆண்டு தன் கடல் பகுதியில் வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தியது. தன் கடற்பரப்பின் வலிமையை பறைசாற்றும் விதமாக சீனா இதனைச் செய்துகாட்டியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னாள், சீனாவின் அண்டை நாடுகளுடனான நட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்து தெரிவித்திருந்த ஹெகல், “சீனா தன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தைவான் போன்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கையாள வேண்டும்.
மேலும் தன் பாதுகாப்பு நடவடிக்கை விஷயத்தில் நேரடியாகவும் திறந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்” எனக் கூறியிருந்தார். மேலும் அவர் லியோனிங் கப்பலை பார்வையிட விரும்பம் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்து சீன அரசாங்கம் ஹெகல்க்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஹெகல், லியோனிங் விமானம் தாங்கிக் கப்பலை முதன்முறையாக பார்வையிட இருக்கும் முதல் வெளிநாட்டினர் என்ற சிறப்பினைப் பெற இருக்கிறார்.