சென்னை, ஜூன் 27 – தமிழகத்தைச் சேர்ந்த குமுதம் வார இதழில், பிரபல மர்ம கதை நாவலாசிரியர் ராஜேஷ்குமார் எழுதும் புதிய தொடர் நாவலின் பெயர் ‘வெல்வெட் குற்றங்கள்’.
“சரி அதுக்கு என்ன இப்போ?” என்று கேட்பவர்கள் கீழே வரும் அடுத்த வரியைப் படித்தவுடன் பரபரப்பாகி விடுவீர்கள்.
காரணம், ‘வெல்வெட் குற்றங்கள்’ என்ற தொடர்கதையின் கதை, 3 மாதங்களுக்கு முன் மாயமான மலேசிய விமானம் பற்றியது.
“பரபரப்பாகி விட்டீர்கள் பார்த்தீர்களா?”
கடந்த வாரம் தொடங்கிய இந்த தொடர்கதை குறித்து குமுதம் வார இதழ் வெளியிட்டுள்ள ஒரு பக்க விளம்பரத்தில், “மலேசிய விமானக் கடத்தலின் பின்னணியில் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதும் வெல்வெட் குற்றங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
எழுத்துலகில் தனக்கென்று தனி பாணியை உருவாக்கியவரான ராஜேஷ்குமார், இந்த கதையில் என்னவெல்லாம் மர்மங்களை சேர்க்கப் போகிறாரோ என்று அவரது ரசிகர்கள் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
மலேசிய விமானம் எம்எச்370 மாயமான விவகாரம், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்துத் துறையை கதிகலங்கச் செய்தது ஒருபுறம் இருக்க, உலகில் பல முன்னணி எழுத்தாளர்களுக்கும், கலைத்துறையில் இருப்பவர்களுக்கும் இந்த சம்பவம் ஒரு புதிய கருவை அளித்துள்ளது என்றே தோன்றுகிறது.
காரணம் எம்எச்370 மாயமாகி, 3 மாதங்கள் ஆகியும் அதற்கு விடை தெரியாத நிலையில், இதுவரை வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூன்று முக்கிய எழுத்தாளர்கள் காணாமல் போன விமானம் பற்றிய புத்தகமே எழுதி விட்டார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூற்றை மையமாக வைத்து மலேசிய விமானத்தின் முடிவை எழுதியுள்ளனர்.
அதே வேளையில், பிரபல ‘காமசூத்ரா 3டி’ படத்தை இயக்கிய ரூபேஷ் பவுல் என்ற இந்திய சினிமா இயக்குநர் தனது நிறுவனத்தின் மூலம் மாயமான மலேசிய விமானம் MH370 பற்றிய படம் ஒன்றை தயாரித்துள்ளார்.
‘The Vanishing Act’ எனும் பெயரைக் கொண்ட அத்திரைப்படம் இதுவரை சொல்லப்படாத கதையைச் சொல்லும் என்றும் பரபரப்பை அந்த இயக்குநர் கொளுத்திப் போட்டுள்ளார்.
இந்நிலையில், மாயமான இந்த விமானம் குறித்த சம்பவங்களின் அடிப்படையில் வெளிவரும் முதல் தமிழ் நாவலாக ‘வெல்வெட் குற்றங்கள்’ கருதப்படுகின்றது.
இதில் மர்மக் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார், எந்த கோணத்தில் காணாமல் போன விமான சம்பவத்தை அணுகப் போகின்றார் என்ற ஆவல் தமிழ் நாவல் இரசிகர்களிடையே இப்போதே எழுந்திருக்கின்றது.
எம்எச்370 விமானத்திற்கு உண்மையில் என்ன நேர்ந்தது? என்று அதிகாரிகள் கண்டுபிடிக்கும் வரை மர்ம நாவல் பிரியர்களுக்கும், திகில் சினிமா ரசிகர்களுக்கும் இது போன்ற கதைகளுக்கு இனிமேல் பஞ்சமிருக்காது என்பது மட்டுமே நிதர்சன உண்மை.
– ஃபீனிக்ஸ்தாசன்