புதுடில்லி, ஜூலை 8 – முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
ராஜீவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாள் அறிவித்தார்.
இது குறித்து மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. மத்திய அரசின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த 7 பேரையும் விடுவிக்க இடைக்கால தடை விதித்து பிப்ரவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதன் பிறகு இந்த வழக்கு 5நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
விசாரணையின்போது அந்த 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிப்பது என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. அதாவது இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலையையே மோடி அரசும் எடுக்க உள்ளதாக தெரிகிறது.