கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 மலேசிய விமானத்தில் பலியான மலேசியப் பயணிகளில் 16 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெதர்லாந்தில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் லியாவ் தியாங் லாய், மலேசியா மற்றும் டச்சு அதிகாரிகளின் உதவியுடன் மலேசியப் பயணிகளின் சடலங்களை அடையாளம் காண கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து லியாவ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலேசியர்களின் சடலங்களைக் கண்டறிந்து அதை விரைவில் மலேசியாவிற்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதில் அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பயணிகளின் குடும்பத்தினரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளித்து, சடலங்களை ஒப்படைப்பது குறித்து கலந்தாலோசித்து வருகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், சடலங்கள் எப்போது மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்பதை லியாவ் தெரிவிக்கவில்லை.
டந்த ஜுலை 17-ம் தேதி, ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூரை நோக்கி வந்த மலேசியா ஏர்லைஸ் எம்எச்17 விமானம், கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 283 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.