கோலாலம்பூர், நவம்பர் 10 – தேசநிந்தனைச் சட்டத்தை நிறுத்துவதற்கோ அல்லது திருத்தம் செய்வதற்கோ எதிராக அம்னோ மகளிர் அணி தேசிய அளவில் மக்களிடம் சென்று கையெழுத்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று முதல் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், தேசிய முன்னணியின் அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களையும் சந்தித்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடவுள்ளதாகவும் இந்த நடவடிக்கைக்குழுவின் தலைவர் டத்தோஸ்ரீ ஷாரிசட் அப்துல் ஜாலில் தெரிவித்துள்ளார்.
மக்களின் கையெழுத்துகள் அடங்கிய மனு பிரதமர் நஜிப் துன் ரசாக்கிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தேச நிந்தனைச் சட்டத்தில் எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும், அதற்கு முன் எல்லா கட்சிகளின் கருத்துகளையும் கேட்க வேண்டும். குறிப்பாக மகளிர் அணியின் கருத்தை அரசாங்கம் காது கொடுத்து கேட்க வேண்டும்” என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஷாரிசட் தெரிவித்தார்.
மேலும், அனைத்து மகளிர் சார்பாக தான் இந்த கோரிக்கையை பிரதமரிடம் முன்வைப்பதாகவும் ஷாரிசட் குறிப்பிட்டுள்ளார்.
தேச நிந்தனை சட்டத்தை அகற்றுவதாக தனது உருமாற்றுத்திட்டத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.