கோலாலம்பூர், பிப்ரவரி 10 – இன்று தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வழி உரையாடிய அன்வார் இப்ராகிம் தனது போராட்டம் ஓயாது என்றும், தன்னை சிறைக்கு அனுப்புவதன் மூலம் தனது குரலை முடக்கி விட முடியாது என்றும் தீர்க்கமாகத் தெரிவித்தார்.
அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாக நீதிமன்றம் அரை மணி நேரம் ஓய்வில் இருந்தபோது, தொலைபேசி மூலம் அவர் சிஎன்என் தொலைக்காட்சி அறிவிப்பாளரிடம் தனது கருத்துகளை பதிவு செய்தார்.
“இந்த தீர்ப்பு நாட்டின் உயரிய நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் இடையில் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு, விரிவான வியூகத்தோடு வகுக்கப்பட்ட ஒன்று” என்றும் அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.
“நான் சிறைக்கு செல்லவிருப்பதால், அனைத்துல அரசியல் நெருக்குதல்கள் மூலம் எனது போராட்டம் தொடரும் என்றும், அத்தகைய அனைத்துலக அமைப்புகள் தனது போராட்டத்திற்கு உதவ முடியும்” என்றும் அன்வார் சிஎன்என் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
என்னோடு எதிர்க்கட்சிகளின் அரசியல் போராட்டம் ஓய்ந்துவிடாது என்றும் தெரிவித்த அன்வார், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்காத்தான் கூட்டணித் தலைவர்களின் கூட்டத்தில், தான் சிறை சென்றாலும் எதிர்க் கட்சிகளின் போராட்டம் தொடரும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், இன்றைய நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்பாக அத்தகைய அறிவிப்பை செய்ய வேண்டாம் என்ற புரிந்துணர்வுக்கேற்ப எதிர்க்கட்சிகள் அந்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அன்வார் இப்ராகிம் குறிப்பிட்டார்.
தனது ஆதரவாளர்கள் ஆத்திரம் கொண்டிருந்தாலும், அமைதிக்குப் புறம்பான போராட்டத்தில் தானும் தனது ஆதரவாளர்களும் ஈடுபடப் போவதில்லை என்றும் அன்வார் கூறியுள்ளார்.