லண்டன், மார்ச் 17 – உலக அளவில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக அறிக்கைகள் வெளியாகி உள்ளன.
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு ஆய்வு நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் ஆயுத இறக்குமதி பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுகளின் படி, ஆயுத இறக்குமதியில் இந்தியா, கடந்த 5 ஆண்டுகளில் பெரும் அளவில் முன்னேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“2005-2009-ம் ஆண்டு காலகட்டங்களில் இருந்ததை விட இந்தியா, 2010-14-ம் ஆண்டுகளில் ஆயுத இறக்குமதியை அதிக அளவில் செய்து வருகிறது. இந்தியாவின் தற்போதய ஆயுத இறக்குமதி சதவீதம் முந்தைய ஆண்டுகளை விட 140 சதவீதம் உயர்ந்துள்ளது. இது அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானை ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும்.”
“இதில், ரஷ்யாவில் இருந்து அதிக பட்சமாக 70 சதவிகித ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. அனைத்துலக அடிப்படையில் அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த பட்டியலில், இந்தியா உட்பட நான்கு ஆசிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஆயுத இறக்குமதியை பொருத்தவரை போர் விமானங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன. மேலும், சமீபத்தில் ஆயுத இறக்குமதி தொடர்பாக அமெரிக்கா போன்ற நாடுகளுடன் புதிதாக பல ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன . அதனால் வரும் காலங்களிலும் இந்தியா, ஆயுத இறக்குமதியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் என்பது நிச்சயம்.