கோலாலம்பூர், ஜூன் 15 – பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய அவதூறான கருத்தைப் பதிவு செய்ததற்காகத் தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா கோர் மிங் மீது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோர் ஆகிய இருவரும் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதற்கான நகல், கோர் மிங்கிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக இன்று நஜிப்பின் வழக்கறிஞர் டத்தோ முகமட் ஹபாரிசாம் ஹாருன் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிகின்றது.
கடந்த மார்ச் மாதம் நட்பு ஊடகம் ஒன்றில், பிரதமர் நஜிப்பும் ரோஸ்மாவும் அமைச்சர்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மிங், அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமரின் மனைவி இருக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எனினும், அப்புகைப்படம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது அல்ல என்பதும், பிரதமரின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணத்தின் போது எடுக்கப்பட்டது என்பதும் பின்னர் தெரிய வந்தது.