கோலாலம்பூர், ஜூன் 20 – கூட்டணியில் இருந்து வெளியேறிய ஜசெக, பக்காத்தான் மடிந்துவிட்டதாகக் கூறுவதை பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பக்காத்தானைப் பற்றி எதிர்மறையாகக் கூற ஜசெக-வுக்கு உரிமை இல்லை எனக் குறிப்பிட்டுள்ள ஹாடி, கூட்டணி என்ற அர்த்தத்தை ஜசெக புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு முடிவுகளை எடுத்து வருவதாகவும் ஹாடி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹாடி, “அவ்வாறு கூறிக்கொள்வது (பக்காத்தானை மடிந்துவிட்டது) அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஆனால் என்னைப் பொருத்தவரை அவர்கள் கூறுவது தவறான கணிப்பு. காரணம் ஒரு கட்சியை மட்டும் பக்காத்தான் என்று கூறிவிடமுடியாது. பக்காத்தான் என்பது நிறைய கட்சிகள்” என்று தெரிவித்துள்ளார்.
அப்படியானால் பக்காத்தான் இன்னும் நிலைத்து இருக்கிறது என்று கருதுகின்றீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆமாம்.. அப்படித்தான் இருக்கிறது” என்று ஹாடி பதிலளித்துள்ளார்.