Home நாடு கேமரன் மலை : கேவியஸ் போட்டியில் குதிக்கலாம்

கேமரன் மலை : கேவியஸ் போட்டியில் குதிக்கலாம்

1367
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கேமரன் மலை இடைத் தேர்தல் மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் வேளையில், அந்தப் போட்டியை மேலும் பரபரப்பாக மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியசும் போட்டியில் குதிக்கலாம் என்ற ஆரூடங்கள் பரவி வருகின்றன.

14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக சுமார் ஓராண்டு காலத்திற்கு கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியும், கேவியஸ் பெயரும் இணைந்தே ஊடகங்களிலும், மக்களிடத்திலும் பேசப்பட்டு வந்தன.

கேமரன் மலை தனக்கே வேண்டும் என இறுதிவரைப் போராடிய கேவியஸ் கடைசியில் மஇகா போட்டியிடுவதற்காக தனது போராட்டத்தை விட்டுக் கொடுத்தார். மைபிபிபி கட்சிக்கு சிகாம்புட் தொகுதி ஒதுக்கப்பட்டு அங்கு டத்தோ லோகா பால மோகன் போட்டியிட்டுத் ஜசெகவிடம் தோல்வியடைந்தார்.

Cameron Highlands – Parliament – facts & figures
#TamilSchoolmychoice

இதற்கிடையில் மைபிபிபி கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் போராட்டங்களால் அந்தக் கட்சி பிளவுபட்டு, தற்போதைக்கு இருதரப்பும் தாங்களே மைபிபிபி கட்சியின் உண்மையான தலைமைத்துவம் எனக் கூறி வந்தாலும், சங்கப் பதிவிலாகா பதிவுகளின்படி கேவியஸ் தலைமையில் மைபிபிபி அதிகாரபூர்வமாகச் செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மைபிபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து வெளியேறி தனித்து செயல்பட்டு வருவதால், இனி தேசிய முன்னணி தலைமைத்துவ முடிவுகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் கேவியசுக்கு இல்லை.

கேமரன் மலைக்கு மீண்டும் தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில், அங்கு போட்டியிட்டு தனது நீண்ட நாளைய கனவை நனவாக்க – அந்தத் தொகுதியில் தனது ஆதரவு பலத்தையும் – மைபிபிபி கட்சியின் இருப்பையும் நிலைநிறுத்த கேவியஸ் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றியடையும் வாய்ப்புகள் பிரகாசமாக இல்லாவிட்டாலும், கேவியஸ் கேமரன் மலையில் நீண்ட காலமாக களப்பணியாற்றி வந்திருப்பதாலும், அவருக்கிருக்கும் தொடர்புகளாலும் கணிசமான வாக்குகளை அவரால் பெற முடியும் என கணிக்கப்படுகிறது.

ஆனால், அவர் போட்டியிட்டால் அதனால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது தேசிய முன்னணி வாக்குகளா – அல்லது நம்பிக்கைக் கூட்டணி வாக்குகளா – என்பது எழுகின்ற இன்னொரு சுவாரசியக் கேள்வி!

அப்படியே அவர் போட்டியிடாவிட்டாலும், கண்டிப்பாக தேசிய முன்னணிக்கு ஆதரவு தராமல், நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளருக்கே ஆதரவு தருவார் என்றும் இன்னொரு மைபிபிபி வட்டாரம் தெரிவித்தது.

இந்த சூழ்நிலையில், மஇகா தலைமைத்துவம் 3 வேட்பாளர்களைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படும் வேளையில், ஜசெக, நம்பிக்கைக் கூட்டணி சார்பிலான தனது வேட்பாளரை அடுத்த 10 நாட்களில் அறிவிக்கும் எனக் கூறியுள்ளது.

-இரா.முத்தரசன்