Home One Line P1 “அம்னோ அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும்” – துங்கு ரசாலி

“அம்னோ அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும்” – துங்கு ரசாலி

610
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பெர்சாத்து கட்சி பல இனக் கட்சியாக உருமாறியிருப்பதால், அம்னோ மொகிதின் யாசினின் நடப்பு அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என துங்கு ரசாலி ஹம்சா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

துங்கு ரசாலி அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவர். குவா மூசாங் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினர். அம்னோவின் ஆலோசனைக் குழுவின் தலைவருமாவார்.

“பெர்சாத்து தனது கதவுகளை மலாய்க்காரர் அல்லாதோருக்கு திறந்து விட்டிருக்கிறது. எனவே, முவாபக்காட் நேஷனல் என்ற மலாய்-முஸ்லீம் கூட்டணியில் இணைந்திருப்பதற்கு அந்தக் கட்சிக்கு இனியும் தகுதியில்லை. பெர்சாத்துவின் இலக்குகள் திசை மாறிவிட்டதால் இனியும் அம்னோ அமைச்சரவையில் நீடிப்பதில் அர்த்தமில்லை. உடனடியாக அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும். பொதுத் தேர்தல் விரைவாக நடைபெற வேண்டும்” என துங்கு ரசாலி இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அஸ்மின் அலியால் பல இன கட்சியாக மாறிய பெர்சாத்து

#TamilSchoolmychoice

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தானும் தனது குழுவினரும் அதிகாரபூர்வமாக பெர்சாத்து கட்சியில் இணைவதாக கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) அறிவித்தார்.

தலைநகர் ஜாலான் டூத்தாவில் உள்ள அனைத்துலக வாணிப, கண்காட்சி மையத்தில் அரசாங்கச் சார்பற்ற இயக்கங்கள் இணைந்து, காங்கிரஸ் நெகாரா என்ற பெயரில் நடத்திய பிரம்மாண்ட கூட்டத்தில் அஸ்மின் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டிருந்த இந்தக் கூட்டத்தில் அஸ்மின் உரையாற்றினார். “பெர்லிஸ் முதற்கொண்டு சபா வரையிலான எனது ஆதரவாளர்கள் அனைவரும் பிரதமர் மொகிதின் யாசினின் தலைமைத்துவத்தை ஏற்று இன்று முதல் பெர்சாத்து கட்சியில் இணைகிறோம்” என பலத்த கரவொலிக்கிடையில் அவர் அறிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மொகிதின் யாசினும் கலந்து கொண்டார்.

இந்த இணைப்பைத் தொடர்ந்து, அஸ்மின் அலியோடு பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறிய மலாய்க்காரர் அல்லாத உறுப்பினர்களும் பெர்சாத்துவில் இணைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

கட்சியில் புதிதாக இணைந்த அஸ்மின் அலி பெர்சாத்துவில் உதவித் தலைவராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் இத்தகையதொரு நியமனம் குறித்து முதலில் கட்சிக்குள் விவாதிக்கப்பட வேண்டும் என பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு தெரிவித்திருக்கிறார்.

இதுவும் அஸ்மின் அலி வருகை குறித்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் அந்தக் கட்சிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

இந்த மாற்றங்களின் மூலம் மலாய் கட்சியாக துன் மகாதீரால் 2017-இல் தொடங்கப்பட்ட பெர்சாத்து, மலாய்க்காரர்கள் அல்லாதவர்களுக்கும் கதவுகளைத் திறந்து விடுவதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடக்கியிருக்கிறது.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சருமான டத்தோஶ்ரீ எட்மண்ட் சந்தாரா ஏற்கனவே பெர்சாத்து கட்சியில் இணைந்திருப்பதாக அறிவித்திருந்தார்.

முவாபாக்காட் கூட்டணியில் இணையும் பெர்சாத்து

முவாபாக்காட் நேஷனல் எனப்படும் அம்னோ-பாஸ் கூட்டணியில் இணைவதாகவும் மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து அம்னோவில் சலசலப்புகள் எழுந்திருக்கின்றன. மலாய்-முஸ்லீம் கூட்டணியான முவாபாக்காட் நேஷனல் அணியில் மலாய்க்காரர் அல்லாத பல இனக் கட்சி எவ்வாறு இணையலாம் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

இன்னொரு புறத்தில் பெர்சாத்து தனது தொடக்ககால இலக்கிலிருந்து நிலை தடுமாறி, திசை மாறிச் செல்கிறது என்ற எதிர்ப்புகள் பெர்சாத்து கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பெர்சாத்து கட்சியிலிருந்து விலகி துன் மகாதீர் தொடக்கியுள்ள பெஜூவாங் கட்சியில் இணைய பெர்சாத்து அடிமட்ட உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். பலர் ஏற்கனவே இணைந்து விட்டனர்.

ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் ஒஸ்மான் சபியான் அண்மையில் சிலிம் இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெஜூவாங் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.