Home நாடு சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

சரவாக் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

935
0
SHARE
Ad

கூச்சிங் : சரவாக் சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் அவசர காலத்தை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) அறிவித்தது.

தேர்தல் ஆணையத்தின் செயலாளர் இக்மால்ருடின் இஷாக் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்திருக்கிறது. இருப்பினும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

சரவாக் சட்டமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை மாமன்னர் சரவாக் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்து பின்னர் அறிவிப்பார் என்றும் இக்மால்ருடின் தெரிவித்தார்.

நடப்பிலிருக்கும் சரவாக் சட்டமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிவரை அதாவது அவசரகாலம் அமுலில் இருக்கும் வரை செயல்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் சரவாக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவர் முகமட் அஸ்பியாவும் தனியாக விடுத்த அறிக்கை ஒன்றில் சட்டமன்றத்தின் தவணைக் காலம் நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஜூன் 6-ஆம் தேதியோடு முடிவடையும் சரவாக் சட்டமன்றத்தின் தவணை

சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத்துக்கான தவணை இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, முதல் சட்டமன்றக் கூட்டம் நடத்தப்படும் தேதியிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சட்டமன்றத்திற்கான தவணை நீடிக்கும் என்கிறது மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம்.

2016-ஆம் ஆண்டு சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முதல் சட்டமன்றக் கூட்டம் ஜூன் 6, 2016-இல் நடைபெற்றது.

அந்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் கணக்கிட்டால் இந்த ஆண்டு ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்திற்கான தவணை முடிவடைகிறது. அந்த தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

எனினும் தற்போது ஆகஸ்ட் 1 வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கிறது.

சிக்கலுக்கு தற்காலிகத் தீர்வை வழங்கிய மாமன்னர்

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 25) சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரியை இயங்கலை மூலம் சந்தித்திருக்கிறார் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின்.

அந்தச் சந்திப்பின்போது ஜூன் 6-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்தின் தவணைக் காலம்  முடிவடைந்தாலும் சரவாக் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்ற ஒப்புதலை மாமன்னர் வழங்கியிருக்கிறார்.

மாமன்னரின் ஒப்புதலைத் தொடர்ந்து சரவாக் சட்டமன்றத்தின் தவணக் காலம் அவசர கால சட்டம் அமுலில் இருக்கும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நீடிக்கும். சரவாக் அரசாங்கமும் ஆட்சியில் இருக்கும்.

மாமன்னரின் இந்த முடிவின் அடிப்படையில் சரவாக் சட்டமன்றத் தேர்தல்களை தேர்தல் ஆணையமும் ஒத்திவைத்திருக்கிறது.