சிகாமாட் : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் சிகாமாட் வெற்றியை ரத்து செய்யக் கோரும் வழக்கை அந்தத் தொகுதியின் தேசிய முன்னணி – மஇகா வேட்பாளர் டான்ஸ்ரீ எம். இராமசாமி மீட்டுக் கொண்டுள்ளார்.
இராமசாமி மஇகாவின் தேசிய பொருளாளருமாவார்.
15-வது பொதுத் தேர்தலின் போது செகாமட்டில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யுனேஸ்வரன் வெற்றி பெற்றார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், யுனேஸ்வரன் 5,669 வாக்குகள் பெரும்பான்மையில் பெற்று செகாமட்டில் வெற்றி பெற்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது தேர்தல் விதிகளை யுனேஸ்வரன் மீறியதாகவும் அதனால் அவரின் தேர்தல் வெற்றி செல்லாது என்றும் இராமசாமி வழக்கு தொடுத்தார்.
அவரின் அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும் கூட்டரசு நீதிமன்றத்தில் (பெரடல் கோர்ட்) மேல்முறையீடு செய்தார் இராமசாமி. அந்த வழக்கில் ஆதாரங்கள் இருப்பதால் வழக்கை விசாரிக்க வேண்டும் என கூட்டரசு நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு மீண்டும் இன்று தேர்தல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தனது மனுவை மீட்டுக் கொள்வதாக இராமசாமியின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா கூறியதைத் தொடர்ந்து அதற்கான விண்ணப்பத்தை தேர்தல் நீதிமன்ற நீதிபதி ரோஹானி இஸ்மாயில் இன்று பிற்பகல் அனுமதித்தார்.
இராமசாமி மற்றும் யுனேஸ்வரன் இருவரும் இப்போது மத்திய கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில், அவரது கட்சிக்காரர் தேர்தல் மனுவை மீட்டுக் கொண்டதாக இராமசாமியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீதிபதி ரோஹானி செலவுகள் குறித்து எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.