கிள்ளான் – மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு நன்மையளிக்கக் கூடிய திட்டங்களை அதிகம் அறிவிக்க வேண்டும் என்று சிலாங்கூர் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் (படம்) கேட்டுக்கொண்டார்.
“இந்தியர்கள் கடந்த வாரம் தீபாவளியைக் கொண்டாடினார்கள், ஆனால் சிறு வியாபாரிகளிடம் ஒரே புலம்பல். வியாபாரம் இல்லை, வியாபாரம் மந்தம் என்று! ஆனால் இது கிள்ளானில் மட்டுமின்றி நாடு முழுவதிலும் ஒலித்தது. பெரிய வணிக நிறுவனங்களிலிருந்தும் இதே குறைபாடுகள் எதிரொலித்தது” என்றார் அவர்.
சேவியர் ஜெயகுமார் நேற்று வெளியிட்ட தனது பத்திரிக்கை அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்:
ஊதிய உயர்வை வழங்க வேண்டும்
ஆக, இதற்கு அடிப்படை காரணம் ஏழ்மை! அதிகமான மக்கள், குறிப்பாக இந்தியர்கள் தங்கள் வருமானத்திலிருந்து அன்றாட செலவுகளையே ஈடுசெய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் வருடத்திற்கு ஒருமுறையே தீபாவளி என்றாலும், அதற்குக் கூடுதலாக எப்படிச் செலவு செய்ய முடியும்?
மிக முக்கியமாக பி-40 (B-40) என்று வரையறுக்கப் பட்ட வெள்ளி 3900 ரிங்கிட்டுக்கும் கீழ் மாத வருமானமாகப் பெரும் 40 விழுக்காடு மக்களை அதிகம் வாட்டிவதைக்கும் அம்சங்களைக் கவனத்தில் கொண்டு அதனைக் களைவதில் அரசாங்கம் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண நாட்டில் B-40 என்று வரையறுக்கப் பட்டப் பிரிவினருக்கு உடனடி ஊதிய உயர்வை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு இன்றைய பணவீக்கத்தையும், விலைவாசியையும் கருத்தில் கொண்டு, அமைதல் வேண்டும்.
பகுதி நேர வேலைகளில் மாணவர்கள்
அரசாங்க மருத்துவமனைகள் சில மருந்துகளைக் கூட நோயாளிகள் சொந்தமாக வாங்கிவரும்படி ஆலோசனைகளை வழங்குகின்றன. உயர் கல்வி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் குறைக்கப்பட்டு விட்டதால், மாணவர்கள் உணவுக்கே திண்டாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சில மாணவர்கள் பகுதி நேர வேலைகள் செய்வதாக குறைப்பட்டுக் கொள்கின்றனர். இது, நாட்டில் பெரிய அளவில் சமுகச் சீர்கேடுகளுக்கு இட்டுச் செல்லும் மிக, ஆபத்தான அணுகுமுறையாகும்.
ஆகையால் சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.
பிரதமர் இந்தியச் சமுதாயத்தின் உற்ற தோழரா?
இந்தியச் சமுதாயத்தின் உற்ற தோழனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முற்படும் பிரதமர், உண்மையாக இச்சமுதாயத்தில் நிலவும் சில சமூகச் சீர்கேடுகளுக்கான காரணங்களைக் கவனத்தில் கொண்டு, அதனைக் களைய அரசாங்க இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சேவியர் கேட்டுக்கொண்டார்,
“நீண்டகாலமாக அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளாத ஒரு விவகாரமாக மலிவு விலை மதுபானம் இருக்கிறது. மலிவு விலை மதுபானம் பல சமுகச் சீர்கேடுகளுக்கு இட்டுச் செல்வதாக மட்டுமின்றி உயிரைப் பறிக்கும் ஒரு பானமாக இருப்பதைச் சமீப மருத்துவச் சஞ்சிகைகள் காட்டுகின்றன. மலிவு விலை மதுபானங்களைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பட்ஜெட்டில் மலிவு விலை மதுபானத்தைத் தடை செய்வதே, பிரதமர் இந்தியர்களுக்கு வழங்கும் சிறந்த பரிசாக அமையும்” – எனவும் சேவியர் ஜெயகுமார் வற்புறுத்தினார்.
“இந்திய இளைஞர்களின் குண்டர் கும்பல் ஈடுபாட்டுக்கும், குடும்பம், ஏழ்மை, கல்வி, தொழில் ஆகியவற்றுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனை அரசாங்கம் உணர வேண்டும். சிறையும் தண்டனையும் மட்டுமே அவர்களை திருத்தாது என்பதால் அவர்களின் குடும்பம் ஏழ்மையிலிருந்து விடுபட எல்லா மட்டத்திலும், வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதிகமான இந்திய இளைஞர்களுக்கு அரசாங்க வேலைகளில் வாய்ப்பு வழங்கிட வேண்டும்” என்றும் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.
சேவியர் ஜெயகுமார் பின்வரும் சில அம்சங்கள் குறித்தும் தனது பத்திரிக்கையில் குறிப்பிட்டார்:-
பிடி3 தேர்வுக்குப் பின் மாணவனா? பயணியா?
மிக ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பங்களைச் சார்ந்த வளரும் பிள்ளைகளுக்குத் தங்கிப்படிக்கும் (ஆசிரமம்) பள்ளி வசதிகள் வழங்கப்பட வேண்டும். தற்போதைய கல்வி முறையில் பிடி 3 தேர்வுக்குப் பின் எஸ்பிஎம் வரை பல மாணவர்கள் வெறும் பயணிகளாக வகுப்புகளில் அமர்ந்திருப்பதை ஆசிரியர்களும், கல்வி இலாக்காவும் நன்கு அறியும்.
“அப்படிப்பட்ட மாணவர்களைக் கைத்தொழில்களை இளமையிலேயே கற்க, தொழில்துறை, தொழில் நுட்பப் பள்ளிகளுக்கு அனுப்பவேண்டும். அதற்குக் கல்வி முறையில் சீரமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். தொழில் நுட்பப் பள்ளிகள் நாடு முழுவதிலும் எல்லா மாவட்டங்களிலும் ஒரு பள்ளியாவது இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். இதனால் மனித மூலதனம் வீணடிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் பதின்மவயதினரைக் குண்டர் கும்பல் வலையிலிருந்தும் மீட்டு, ஏழ்மையான அவர்களின் குடும்பங்களை ஏழ்மையிலிருந்து மீட்கவும் உதவும்” என்றும் சேவியர் ஆலோசனை வழங்கினார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலை படும்வீழ்ச்சி அடைந்திருந்தாலும், இங்கு எரிபொருள் விலை உயர்ந்து வருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. எரிபொருள் விலை குறைக்கப்பட வேண்டும்.
பிரதமர் கடந்த தேர்தலில் மலேசியாவை உயர்ந்த வருமானங் கொண்ட நாடாக மாற்றுவதாக வாக்களித்தார், ஆனால் அதற்கு மாறாகக் கடந்த 5 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மிகக் குறைந்த வருமானத்தை மக்கள் பெற்று வருகின்றனர் என்பதை நாட்டின் நிதி அமைச்சருமான நஜிப் நன்கு அறிவார்.
மக்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் கொடுத்த விலையுடன் இன்று வழங்கும் விலையை ஒப்பிட்டால், மக்களின் உண்மையான வருமானம் குறைந்து வருவதை மக்கள் அறியக்கூடும்.
பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதை விட ரிங்கிட்டின் மதிப்பு வீழ்ந்து விட்டது என்பதே சரி.
இவைகளுக்கு முக்கியக் காரணம் அரசாங்கத்தின் முறைகேடுகள், ஊதாரித்தனம், வீண் விரயத்தின் விளைவால் நமது நாணயம் வெகுவாக மதிப்பு இழந்து விட்டது.
அரசாங்கம் அதன் வருமானத்தை உயர்த்திக்கொள்ள ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. ஆனால், வாக்களித்தபடி ஜிஎஸ்டி வரியின் பலன் மக்களை அடையவில்லை. அதே வேளையில் கல்வி, மருத்துவம் உட்படப் பல அத்திவாசிய சேவைகளை வழங்கும் சேவை எல்லாத் துறைகளுக்கான மானியங்கள் அதிகரிக்கப் படவேண்டும்”
மேற்கண்டவாறு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது நீண்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.