Home நாடு அம்னோவை விட ஜோ லோ இப்போது முக்கியமாகிவிட்டார் – ராய்ஸ் யாத்திம் சாடல்

அம்னோவை விட ஜோ லோ இப்போது முக்கியமாகிவிட்டார் – ராய்ஸ் யாத்திம் சாடல்

808
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ராயிஸ் யாத்திம்

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வணிகரான ஜோ லோ இப்போது அம்னோவை விட, அரசாங்கத்தின் கடப்பாட்டை விட முக்கியமானவராகி விட்டார் என முன்னாள் தகவல் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் கடுமையாகச் சாடியுள்ளார்.

அம்னோவில் நஜிப் தலைமைத்துவத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்களில் ராய்ஸ் யாத்திமும் ஒருவர். மற்றொரு முக்கிய முன்னாள் தலைவர் ரபிடா அசிஸ் ஆவார்.

தொடர்ந்து தனது கருத்துகளைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வரும் ராயிஸ் யாத்திம் “ஜோ லோவை கண்டனம் செய்வதா அல்லது விசாரணை செய்வதா என்பதுகூட தற்போது இருபக்க விவாதமாகிவிட்டது. அம்னோ கட்சியை விட, மக்களுக்கான அரசாங்கத்தின் கடப்பாட்டை விட ஜோ லோ இப்போது முக்கியமாகக் கருதப்படுகிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதைத்தான் ஜாசா (Jasa-Special Affairs Department) எனப்படும் அரசு இலாகாவும் அதன் அதிகாரிகளும் விரும்புகின்றனர் என்றும் ராயிஸ் தெரிவித்துள்ளார்.

அண்மையக் காலமாக அவர் தெரிவித்து வரும் கருத்துகளால் அவருக்கும் ஜாசா அமைப்பு ஆலோசகர் துன் பைசால் இஸ்மாயில் அசிசுக்கும் இடையில் கருத்து மோதல்கள் உருவெடுத்துள்ளன. சில முன்னாள் அமைச்சர்களும் ராயிஸ் கருத்துகளுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்கள் தொடுத்து வருகின்றனர்.

ராயிஸ் போன்ற அமைச்சருக்கு இணையான பொறுப்பில் இருப்பவர்கள் முறையான நடைமுறைகளின் வழி தங்களின் கண்டனங்களை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என துன் பைசால் கூறியிருந்தார்.

ராயிஸ் அரசாங்கத்தின் பண்பாட்டு சிறப்பு ஆலோசகராக நியமனம் பெற்று செயல்பட்டு வருகிறார். இந்தப் பதவி அமைச்சர் பதவிக்கு நிகரானதாகக் கருதப்படுகிறது.

அதற்கு பதிலளித்த ராயிஸ் “பிரதமர் சொல்லட்டும் நான் பதவி விலகுகிறேன். மாறாக சில கைக்கூலிகள் வற்புறுத்துவதற்காக விலக மாட்டேன்” என அறிவித்தார்.

சில அமைச்சர்களும் தொடர்ந்து ஜோ லோவைத் தற்காத்து வருகின்றனர். பல்ஊடக அமைச்சர் சைட் கெருவாக், சுற்றுலா அமைச்சர் நஸ்ரி ஆகியோர் இவர்களில் அடங்குவர்.

இத்தகைய நிலைப்பாடு எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவைப் பாதிக்கும் என்பதால் சில முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் அம்னோ தலைவர்களும் பகிரங்கமாக தங்களின் கண்டனங்களைத் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முக்கியத் தலைவராகவும், அமைச்சராகவும் திகழ்ந்தவர் ராயிஸ் யாத்திம்.