Home நாடு பிகேஆர் ரவாங் சட்டமன்றம்: பெயர் நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தினார் கான் பெய் நீ!

பிகேஆர் ரவாங் சட்டமன்றம்: பெயர் நீக்கப்பட்டதால் கண்ணீர் சிந்தினார் கான் பெய் நீ!

1074
0
SHARE
Ad

ரவாங் – நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார்.

இந்நிலையில், ரவாங் சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு தவணைகளாக பிகேஆர் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கான் பெய் நீயின் பெயர் அப்பட்டியலில் இருந்து விடுபட்டிருந்தது.

அவருக்குப் பதிலாக சுவா வெய் கியாட், ரவாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தான் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு கான் பெய் நீ, கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்திருக்கிறார். விஷம் கலந்த பேனா மையில் எழுதப்பட்ட கடிதம் தொடர்பான குற்றச்சாட்டால் தான் தனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாக கான் பெய் நீ குறிப்பிட்டார்.

இது குறித்து நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் பேசிய கான் பெய் நீ, ரவாங் சட்டமன்ற தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியைத் தான் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என்றும், தன் மீது தவறு இல்லையென நிரூபிக்கக் கூட கட்சித் தலைமை தனக்கு அவகாசம் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ரவாங் சட்டமன்றப் பணிகளுக்கு இரண்டு வார விடுப்பு எடுத்ததற்குக் காரணம், தனக்கு கடந்த மாதம் தான் குழந்தை பிறந்தது என்றும் கான் பெய் நீ குறிப்பிட்டார்.

“கடந்த ஞாயிற்றுக்கிழமை பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலைச் சந்தித்தேன். விஷம் கலந்த பேனா மையால் எழுதப்பட்ட கடிதம் காரணமாக நான் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தன் மீது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றது என்றும் கான் தெரிவித்தார்.

இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்கும், ரவாங் மக்களுக்கு சேவையாற்றி வரும் தான், இம்முறை தேர்தலில் போட்டியிட முடியாவிட்டாலும் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும், தன் மீதான களங்கத்தைப் போக்குவேன் என்றும் கான் பெய் நீ உறுதியளித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், ரவாங் சட்டமன்றத் தொகுதியில், மசீச வேட்பாளர் லீ லி இயூவை எதிர்த்துப் போட்டியிட்ட கான் பெய் நீ, 18,358 வாக்குகள் பெற்று, 9,241 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.