கோலாலம்பூர் – அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தலைமையிலான ஒரு குழுவினர் கடந்த அக்டோபரில் தன்னைச் சந்தித்து அம்னோவிலிருந்து விலக விரும்புவதாகவும், அதுகுறித்துத் தனது ஆலோசனையைக் கேட்டதாகவும் பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ளார்.
அம்னோவின் பதிவை இரத்து செய்ய வேண்டாம் என பிரதமரைத் தாங்கள் கேட்டுக் கொண்டதாக முகமட் ஹசான் கூறியிருந்தது தொடர்பில் மகாதீரிடம் கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
எனினும் முகமட் ஹசான், தான் எப்போதும் அம்னோவிலேயே தொடர்ந்து இருந்து வரப் போவதாக அண்மையில் கூறியிருந்தார்.
மகாதீருக்கும் முகமட் ஹசான் குழுவினருக்கும் இடையில் நடந்த சந்திப்பு மற்றும் விருந்துபசரிப்பு தொடர்பான புகைப்படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின் அந்தச் சந்திப்பு அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெற்றதாக தெரிவித்தார்.
அந்தச் சந்திப்பில் முகமட்டுடன் அம்னோவின் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் (புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர்) ஹம்சா சைனுடின் (லாருட்), ஷஹிடான் காசிம் (ஆராவ்), நோ ஒமார் (தஞ்சோங் காராங்) ஆகியோரும் அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள மலேசியாகினி இணைய ஊடகம், முகமட் ஹசானைத் தொடர்பு கொண்டபோது “நான் கருத்துரைக்க விரும்பவில்லை. அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று மட்டுமே கூறியிருக்கிறார்.