Home நாடு “தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

“தமிழ் விழாவில் மற்ற மொழிகளுக்கு இடமளிப்பதில் தவறில்லை” முல்லை இராமையா கருத்து

1199
0
SHARE
Ad

(தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் விழாவுக்கான அறிக்கைகள் தமிழ் மொழியில் இல்லாதது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழ் ஆசிரியருமான ம.நவீன் தெரிவித்திருக்கும் கண்டனங்களுக்கு, முனைவர் முல்லை இராமையா (படம்) கடிதம் ஒன்றின் வழி வழங்கியிருக்கும் பதில் விளக்கம் இது)

அன்புள்ள நவீனுக்கு,

தமிழ்ப் பள்ளி பேச்சுப் போட்டிகளில் மற்ற உலக மொழிகளைப் பற்றி பேசவேண்டும்! எவ்வளவு காலம் தான் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கப்போகிறோம்? நம் பெருமையை நமக்குள் பேசியே மாய்ந்து போகப் போகிறோமா? நடுவர்கள்தான் பேசுபொருளைப்பற்றி முன்கூட்டியே அறிந்து தெரிந்து போட்டிக்கு மதிப்பிட வந்தமர வேண்டுமே தவிர, தலைப்பில் குற்றமில்லை.

மற்றவர்களைப் பற்றி அறியாததனால்தான், புரிந்து கொள்ளாததனால்தான் நம் நாட்டில் ஓர் இனத்தவரிடம் இவ்வளவு பிரச்சனை! எந்த மொழி கல்வித்திட்டமாக இருந்தாலும் சரி, உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் அம்சங்களை உள்ளடக்கி இருக்கவேண்டும். அதை அந்தந்த மொழியில்தானே படிக்கிறார்கள்?

#TamilSchoolmychoice

நீங்கள் சொல்கிறீர்கள் – மொழியின் மீதும் மாணவர்கள் மீதும் அக்கறை கொண்ட அனைத்து தரப்பும் ஒன்றிணைந்து நமக்கு நடக்கும் அவலத்தை கண்டிக்கவேண்டும் என்று! நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்.

ஆனால் ஏன் யாருமே தமிழ் பள்ளிக்கு தமிழ் படிக்க வந்த மாணவன்/ மாணவி, 6 வருடங்கள் கழிந்து, ஒரு சிறு வாக்கியத்தைகூட பிழை இல்லாமல் எழுத இயலாமல் வெளியேற அனுமதிக்கிறோம்?

அது பள்ளியின் மாபெரும் குற்றம் இல்லையா? உங்களுக்குத் தெரியுமா எத்தனை 100 குழந்தைகள் தமிழ்பற்றி எள்ளளவுகூட தெரியாமல், ஆசிரியர்களின் புறக்கணிப்பாலும் சக மாணவர்களின் நய்யாண்டியாலும் சுய அடையாளம் இழந்து தன் மதிப்பிழந்து, மானம் இழந்து வெளியேறி அடையாளம் தேடி, தகாத கைகளுக்குள் சிக்குகின்றன என்று?

எந்தத் தமிழ் பள்ளியாவது இந்தச் சிறப்பு குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க தன் பள்ளிக்கு ஏன் சிறப்பு ஆசிரியர் தரவில்லை என்று அரசாங்கத்திடம் குரல் எழுப்பியிருக்கிறதா? தமிழ் காக்கும் எத்தனை தமிழ் பள்ளிக்கு இந்த பிள்ளைகளைப்பற்றி அக்கறை உள்ளது? சொற்பமே!

‘ஏ’ (A) வாங்கிய பிள்ளைகளை ‘ஏ+’ (A+) வாங்க வைக்கவேண்டும் என்பதில்தான் முனைப்பு காட்டுகிறார்களே தவிர இந்த கடைக் கோடியில் தத்தளிக்கும், சீரிய அறிவாற்றல் இருந்தும் தன் மூளைக்கு ஏன் எதுவும் எட்டவில்லை என்று தெரியாமல் புழுங்கிச் சாகும் இளம் குருத்துக்களைப் பற்றி கவலை கொள்வார் யார்?

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி! (குறள்)

இதை விட என்ன சொல்லமுடியும்?

காதிருந்தும் சொல்லச் சொல்ல கேளாதவராய், கண்ணிருந்தும் பிள்ளைகள் தடுமாறிப் போவதைப் பார்ந்துக் கொண்டு, உணர்விருந்தும் பிள்ளைகள் படும் துன்பத்தைப் பாராது, தமிழை வளர்க்கிறோம் என்று, தமிழ்ச் சிறார்களை வன்முறைக்கும், வேலை இல்லாத் திண்டாடத்திற்கும் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம்!

நெஞ்சு பொறுக்குதில்லைதான்!

தமிழ் படிக்கும் வரப்பிரசாதத்தைப் பெற்ற பிள்ளைகளும் அவர்களை மதிப்பிடும் நடுவர்களும் உலக அறிவைப் பெறட்டும்!

முனைவர் முல்லை இராமையா