கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் என கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
ஒரு வேளை அச்சட்டங்களில் மாற்றங்களை செய்ய கட்சி ஒப்புக் கொண்டால் தற்போதைய அம்னோ கட்சியின் தலைவரான டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் பதவி பறிக்கப்படலாம் என பெயர் சொல்ல விரும்பாத அந்நபர் தெரிவித்திருந்தார்.
விதிமுறை 9.9 மாற்றம் செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முக்கியமாக தலைவர்களின் பதவிகள் மீண்டும் பெறப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், நஜிப் மற்றும் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல என அவர் கூறினார்.
ஆயினும், இத்தகைய திருத்தங்களை செயல்படுத்துவதற்கு முன்பதாக கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு கட்சி பேராளர்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், நஜிப் மற்றும் சாஹிட்க்கு சம்பந்தப்பட்ட ஆதரவாளர்களின் முடிவினால், இச்சட்ட நடைமுறைக்குப் பின்னர் கட்சி உடைபடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.