நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி இன்று புதன்கிழமை காலை வரையிலான நாட்டின் முக்கிய செய்திகளின் தொகுப்பை ஒரு வரிச் செய்திகளாக வழங்குகிறோம்.
- மலேசியர்களுக்கான வாக்களிக்கும் வயதை 21-இல் இருந்து 18-ஆக குறைக்கும் அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
- இளையோர்களுக்கான வயது வரம்பை 40-லிருந்து 30-க்கு குறைக்கும் பரிந்துரையில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால், அம்முடிவை மத்திய அரசாங்கம் இரத்து செய்யும் என்று துன் மகாதீர் கூறினார்.
- நஜிப் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை என்று அம்பேங்க் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி உங் சு லிங் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
- தமது முந்தைய நிருவாகத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக திங்கட்கிழமை தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) தாக்கல் செய்த அறிக்கை தம்மை ஆதரிக்கும் வகையில் இருந்தது மன நிறைவை அளிப்பதாக நஜிப் தெரிவித்தார்.
- கணிதம், அறிவியல் பாடங்களை ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலத்தில் கற்பிக்கும் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த கல்வி அமைச்சு முழுமையாக ஆராய்ந்து வருகிறது என துன் மகாதீர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
- இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) என்ற புதிய அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்தார்.
- ஹசிக் அப்துல்லா அப்துல் அசிசுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது யாரென்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
- அமைச்சர் பொன்.வேதமூர்த்தி புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் மாறாக நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேதான் போட்டிகளை உருவாக்கும் என்றும் மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
- பேராக் மாநிலத்தில் உள்ள அரசாங்க உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளில் பல இன்னும் அந்தப் பள்ளிகளுக்கான நிலத்தை அதிகாரபூர்வமாகப் பெறவில்லை என்றும் அதற்காக தாம் பாடுபட்டு வருவதாகவும் செல்லியல் நேர்காணலில் பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.
- ஹசிக் அப்துல்லா வெளியிட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பில் மேலும் மூவரை ஜோகூர் பாரு வட்டாரத்தில் காவல் துறை கைது செய்துள்ளது.