Home நாடு 60 ஆண்டுகளைக் கடந்து, கே.ஆர்.சோமா தலைமையில் வெற்றி நடைபோடும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்

60 ஆண்டுகளைக் கடந்து, கே.ஆர்.சோமா தலைமையில் வெற்றி நடைபோடும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்

961
0
SHARE
Ad

(மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதாரத் தூண்களில் ஒன்றாகக் கடந்த 60 ஆண்டுகளாக வெற்றிகரமாக பீடுநடை போட்டு வரும் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் உதயமான நாள் மே 14. அதனை முன்னிட்டு நக்கீரன் எழுதியிருக்கும் இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

மலேசிய இந்திய சமுதாயத்தின் பெருமையை, குறிப்பாக தமிழர்களின் பெருமையை மலேசியத் திருநாட்டில் நிலைநிறுத்தும் உயரமான ஒரே கட்டடம் துன் சம்பந்தன் மாளிகை. இந்த மாளிகையை தன்னகத்தேக் கொண்டுள்ள தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் (கூட்டுறவு சங்கம்) இந்த ஆண்டுடன் அறுபது வயதை எட்டுகிறது.

கடந்த நூற்றாண்டில் 1960-ஆம் ஆண்டு இதே சமயத்தில் (மே திங்கள் 14-ஆம் நாள்) அன்றைய மஇகா தேசியத் தலைவரும் அமைச்சருமான துன் சம்பந்தன் அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கூட்டுறவு சங்கம்.

#TamilSchoolmychoice

துன் சம்பந்தன் மறைவுக்குப் பின்னர் அவரது துணைவியார் தோபுவான் உமா சம்பந்தன் அவர்களும் இந்தக் கூட்டுறவு சங்கத்தை தலைவராக இருந்து சில ஆண்டுகள் வழிநடத்தினார்.

நாடு விடுதலை அடைவதற்காக மலாயாத் தமிழர்களும் மற்ற இனங்களுடன் இணைந்து அயராது  பாடுபட்டு வந்த வேளையில், ஒருவழியாக 1957-ஆம் ஆண்டில் மலாயா சுதந்திரம் பெற்றது.

இது மிகமிக மகிழ்ச்சிக்கு உரியது என்றாலும் தோட்டப் பாட்டாளிகளின் மனதில் ஒருவித கலக்கத்தையும் அவர்களின் எதிர்காலத்தில் ஒரு கேள்விக் குறியையும் அது ஏற்படுத்தியது.

நாடு விடுதலையைப் பெறவிருந்த தருணத்தில், அதற்கு முன்பிருந்தே ஆங்கிலேய துரைமார், தங்களின் நிருவாகத்தின் கீழ் இருந்த இரப்பர் தோட்டங்களை விற்றுவிட்டு தங்களின் தாய் மண்ணிற்கு திரும்ப ஆயத்தமான காலகட்டம் அது. அத்துடன், உலக சந்தையில் ரப்பரின் மதிப்பும் மங்க ஆரம்பித்ததால், அன்றைய மலாயாவில் செம்பனைத்  தோட்டங்களும் ஆங்காங்கே உருவாக ஆரம்பித்தன.

இதனால், பெருந்தோட்டங்களெல்லாம், துண்டாடல் பிரச்சினைக்கு ஆளாகின. விளைவு, தோட்டப் பாட்டாளிகள் வேலை இழப்பிற்கு ஆளானதுடன், தோட்டம் விட்டு தோட்டம் இடம்பெயர வேண்டிய பேரவலத்திற்கு ஆளாயினர். இதனால், செய்வதறியாது திகைத்து நின்றனர். அந்த நெருக்கடியான நேரத்தில், தோட்டப் பாட்டாளிக் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் தோட்டங்களை வாங்குவதற்காக மஇகா-வின் அன்றைய தேசியத் தலைமையை ஏற்றிருந்த துன் சம்பந்தனார், முன்னெடுத்த திட்டம்தான் – பொதுமக்களிடம் இருந்து ‘பத்து வெள்ளி’ பங்குப் பணத்தைக் கொண்டு தொடங்கப்பட்ட தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்.

இந்தச் சங்கம் தன்னையும் தற்காத்து தனக்கு ஆதாரமான சமூகத்தின் நலனுக்காகவும் பாடாற்றுகின்ற இயக்கம் ஆகும்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் இந்த அளவிற்கு பீடு நடை பயில்வதற்கு முகாந்திரமான காரணம், அதன் சீரிய தலைமைதான்.

ஐநா மன்றத்திற்கான மலேசியப் பேராளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (செனட்டர்), மஇகா கெடா மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவரும்  ‘கபிலவாணர்’, ‘பாரதீய ரத்தன்’, ‘கூட்டுறவுக் காவலர்’, ‘இலக்கியக் காவலர்’, ‘கலைக் காவலர்’ பன்மொழி அறிஞர் என்னும் சிறப்பிற்கெல்லாம் உரியவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரத்தின் தலைமைதான், கூட்டுறவு சங்கத்தின் இத்தனைப் பெருமைக்கும், தொடர்ச்சிக்கும் அடித்தளம்.

மண்ணாளும் மன்னனுக்கேற்ற தளபதியைப் போல கூட்டுறவுக் காவலரின் கொள்கைக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப, அவருக்கு உற்றுழி உதவும் தலைமை இயக்குநர் டத்தோ பா.சகாதேவனும் சமுதாயத்தின் பாராட்டிற்கு உரியவர்.

வாழ்க தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்!

வளர்க  நம் சமுதாயம்!