Home One Line P1 “தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலையுங்கள்” அம்னோவுக்கு சவால்

“தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலையுங்கள்” அம்னோவுக்கு சவால்

580
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – விரைந்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் என பிரதமர் மொகிதின் யாசினை நோக்கி அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான் நேற்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அமானா கட்சியின் துணைத் தலைவர் சலாஹூடின் அயூப் அம்னோவுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

“தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மாநிலத்துக்கான தேர்தலை நடத்துங்கள்” என அவர் அம்னோவை நோக்கி சவால் விடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுத் தேர்தலை நடத்துவதில் உங்களுக்கெல்லாம் அவ்வளவு ஆர்வம் இருந்தால் முதலில் ஜோகூரில் இருந்து தொடங்குங்கள் என்றும் அவர் சவால் விடுத்திருக்கிறார்.

சலாஹூடின் ஜோகூர் மாநில சிம்பாங் ஜெராம் சட்டமன்ற உறுப்பினருமாவார். அம்மாநிலத்தில் உள்ள பூலாய் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும் அவர் செயல்படுகிறார்.

“தேசிய அரசியல், நிலைத்தன்மையற்று இருக்கிறது என்று காரணம் கூறுகிறார்கள். அப்படிப் பார்த்தால் ஜோகூர் மாநிலத்தில்தான் அரசியல் நிலைத்தன்மையின்றி தடுமாறி நிற்கிறது. எனவே, முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துங்கள்” என்றார் அவர்.

ஜோகூர் மாநிலத்தில் தற்போது ஆட்சியிலிருக்கும் தேசியக் கூட்டணிக்கு 29 ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். நம்பிக்கைக் கூட்டணிக்கு 27 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கின்றனர்.

மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் ஜோகூர். ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேசியக் கூட்டணியிலிருந்து நம்பிக்கைக் கூட்டணிக்குக் கட்சி தாவினால் போதும். இரு அணிகளும் சம பலம் பெற்று விடும். ஆட்சியும் கவிழ்ந்து விடும் என்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது ஜோகூர் மாநில ஆட்சி.

எனினும், இனியும் கட்சி மாறுதல்கள் நிகழ்ந்தால், அரசியல் மோதல்கள் நிகழ்ந்தால் மாநில சட்டமன்றத்தைக் கலைத்து விடுவேன் என ஜோகூர் சுல்தான் எச்சரித்திருக்கிறார்.

நடப்பு மந்திரி பெசாராக இருக்கும் அம்னோவின் ஹாஸ்னி முகமட் ஒருமுறை “ஜோகூரின் மிகக் குறைந்த காலம் ஆட்சி செய்த மந்திரி பெசாராக நான் திகழக்கூடும்” எனக் கூறியிருந்தார். எந்த நேரத்திலும் ஆட்சி கவிழலாம் என்ற பொருளில்தான் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

பொதுத் தேர்தலா? அம்னோவிலும் குழப்பங்கள்! முரண்பாடுகள்!

அம்னோவின் பல தலைவர்கள் விரைந்து பொதுத் தேர்தலை நடத்துங்கள் என அடிக்கடி அறைகூவல் விடுத்து வருகின்றனர்.

அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹாசான், உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அம்னோ உச்சமன்ற உறுப்பினர்கள் நஸ்ரி அப்துல் அசிஸ், மகாட்சிர் காலிட் ஆகியோர் திடீர் தேர்தலுக்கு ஆதரவாக அறைகூவல் விடுத்திருக்கின்றனர்.

ஆனால், தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா “அரசாங்கம் நிலைத்தன்மையோடு இருக்கிறது. எனவே, திடீர் தேர்தல் தேவையில்லை” என புதிய கோணத்திலான அறிவிப்பை முரண்பாடாக இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.

அனுவார் மூசா, கூட்டரசுப் பிரதேச அமைச்சருமாவார்.

கொவிட்-19 பிரச்சனைகள் பெருமளவில் தணிந்து விட்டதால், அதன் மூலம் கிடைத்திருக்கும் நற்பெயரையும், அதிகரித்திருக்கும் ஆதரவையும் கொண்டு பிரதமர் மொகிதின் யாசின் திடீர் பொதுத் தேர்தலை நடத்துவார் என பெர்சாத்து கட்சியினர் கோடி காட்டி வருகின்றனர்.

கொவிட்-19 பாதிப்புகளுக்கு இடையிலும் சிங்கப்பூரில் எதிர்வரும் ஜூலை 10-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பது, மலேசியாவிலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்ற ஆரூடங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.

கொவிட்-19 இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலேயே சிங்கை அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்துகிறது. எனவே, இந்தத் தொற்று மலேசியாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் பொதுத் தேர்தல் நடத்துவதில் சிரமங்கள் எழாது என்றே கருதப்படுகிறது.

அதற்கு முன்னோட்டமாக சினி இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறது. திடீர் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதனை நடத்துவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.