Home One Line P1 சிலிம் தேர்தலில் பெஜூவாங் வெற்றி பெற்றால் பேராக் அரசு கவிழுமா?

சிலிம் தேர்தலில் பெஜூவாங் வெற்றி பெற்றால் பேராக் அரசு கவிழுமா?

307
0
SHARE
Ad

ஈப்போ : பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் துன் மகாதீரின் பெஜூவாங் கட்சி வெற்றி பெற்றால் அதைத் தொடர்ந்து பேராக் மாநில அரசு கவிழும் சூழ்நிலை ஏற்படலாம்.

இந்த எச்சரிக்கையை பேராக் முன்னாள் மந்திரி பெசார் முகமட் நிசார் ஜமாலுடின் (படம்) விடுத்துள்ளார்.

சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலில் மகாதீர் கட்சியின் வேட்பாளர் அமிர் குஷாய்ரி முகமட் தனுசி (படம்) வெற்றி பெற்றால் அதன் மூலம் மலாய் வாக்காளர்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவு நிரூபிக்கப்படும். சில மூத்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மகாதீரோடு இணைவதற்கும் முன்வருவர் என முகமட் நிசார் கணித்துள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், அரசியல் பார்வையாளர்கள், கள நிலவரங்கள்படி, தேசிய முன்னணி- பாஸ் – பெர்சாத்து இணைந்த வலிமையான கூட்டணி தேர்தல் இயந்திரங்களோடு இயங்குவதால், அம்னோ வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது.

மேலும் கட்சி சின்னம் இன்றி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவதால் அமிர் குஷாய்ரி பின்னடைவை எதிர்நோக்குவார் என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும் அண்மைய அரசியல் நிலவரங்கள், ஆட்சி கவிழ்ப்பு, மொகிதினின் தலைமைத்துவம் போன்ற அம்சங்களில் மலாய் வாக்காளர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பது தெரியவில்லை. இதை விளக்கும் விதமாக இடைத் தேர்தல் முடிவுகள் அமையும்.

75 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மலாய் வாக்காளர்களை சிலிம் கொண்டிருப்பதால் மலாய் வாக்காளர்களின் எண்ண ஓட்டத்தை சிலிம் முடிவுகள் பிரதிபலிக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 59 சட்டமன்றங்களை பேராக் கொண்டிருக்கிறது. இதில் 32 இடங்களை மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு (படம்) தலைமையிலான தேசியக் கூட்டணி வைத்திருக்கிறது. 24 இடங்களை நம்பிக்கைக் கூட்டணி கொண்டிருக்கிறது.

சிலிம் தேர்தலில் வெற்றிபெற்றால் எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் 25 ஆக உயரும்.

அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஏன் அதிருப்திகள் நிலவுகின்றன என்பதையும் முகமட் நிசார் ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

மூன்று அல்லது நான்கு தவணைகளுக்கும் மேற்பட்ட முறை சட்டமன்ற உறுப்பினர்களைப் புறக்கணித்து விட்டு, ஓரிரு தவணைகள் மட்டுமே பதவி வகித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆட்சிக் குழுவில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால், பேராக் அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களிடையே உள்ளுக்குள் குமுறலும், அதிருப்திகளும் எழுந்துள்ளன என முகமட் நிசார் மேலும் தெரிவித்தார்.

இதே நிலைமைதான் ஜோகூர் மாநிலத்தில் நிலவுவதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோகூரின் முன்னாள் மந்திரி பெசாரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான ஒஸ்மான் சபியான் சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மகாதீரின் பெஜூவாங் கட்சியினரோடு இணைந்து காணப்பட்டார். இது ஜோகூர் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்முனைப் போட்டி

தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சிலிம் சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில், தேசிய கூட்டணி மற்றும் இரண்டு சுயேச்சை வேட்பாளர்களுக்கு இடையிலான மூன்று முனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 29 நடைபெறவிருக்கும் தேர்தலில், தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து அம்னோ தஞ்சோங் மாலிம் தொகுதித் தலைவர் முகமட்சைடி அசிஸ், 43, சுயேட்சை வேட்பாளர் வழக்கறிஞர் அமீர் குசைரி முகமட் தனுசி, 38, மற்றும் கல்வியாளர் டாக்டர் எஸ்.சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் புதிய கட்சி இன்னும் பதிவு செய்யப்படாததால், அந்தக் கட்சியின் வேட்பாளரான குசைரி சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

டாக்டர் எஸ்.சந்தரசேகரனும் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.

நான்கு தவணை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ குசைரி அப்துல் தாலிப் (59) ஜூலை 15-ஆம் தேதி மாரடைப்பால்  காலமானதை அடுத்து சிலிம் சட்டமன்றம் காலியானது.

சிலிம் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்தது.

 

Comments