Home நாடு புதிய அரசாங்கமா? இரகசியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன!

புதிய அரசாங்கமா? இரகசியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன!

1067
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆகஸ்ட் 1-ஆம் தேதியை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாடு முழுமையிலும் பல்வேறு பகுதிகளில் அரசியல் ரீதியான இரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 1 நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாளாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அன்றுடன் நாட்டில் அமுலாக்கப்பட்ட அவசர கால சட்டம் முடிவுக்கு வருகிறது.

அத்துடன், அன்றுதான் அம்னோ ஆளும் தேசியக் கூட்டணிக்கு வழங்கி வரும் ஆதரவை மீட்டுக் கொள்ளப் போகும் இறுதி நாளாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் அடுத்த 14 நாட்களுக்குள் தேசியக் கூட்டணி நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற எச்சரிக்கையையும் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி விடுத்திருக்கிறார். அவ்வாறு நாடாளுமன்றம் கூட்டப்படாவிட்டால் அம்னோ என்ன செய்யும் என்பது குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரையில் இல்லை.

இதைத் தொடர்ந்து அடுத்து என்ன முடிவுகள் எடுப்பது என்பது குறித்து இரகசியக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நாட்டில் குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில், கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கத்தில் இருப்பதால், அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக சந்தித்துக் கொள்வதிலோ, குழுவாகச் சந்திப்பதிலோ தடங்கல்கள் இருக்கின்றன.

எனவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் நிபந்தனைகள் மீறப்படும் அபாயம் இருப்பதால், யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் சந்திக்கும் போக்குகள் தொடர்கின்றன.

ஜாலான் பெல்லாமியில் இரகசியக் கூட்டம் நடைபெற்றதா?

குறிப்பாக, நேற்று (வெள்ளிக்கிழமை ஜூலை 2) இரவு தலைநகர் ஜாலான் பெல்லாமியில் உள்ள ஓர் இல்லத்தில் அம்னோ தலைவர்களின் முக்கியக் கூட்டம் ஒன்று நடைபெற்றதாக மலேசியாகினி செய்தி தெரிவித்தது.

ஜாலான் பெல்லாமி என்பது பழைய அரண்மனையின் பின்னால் பிரம்மாண்டமான அரசாங்கத் தலைவர்கள் தங்குவதற்கான பங்களாக்களைக் கொண்ட வசிப்பிடப் பகுதியாகும்.

நேற்றையக் கூட்டத்தில் இரண்டு துணையமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு துணையமைச்சர், ஒரு மத்திய முழு அமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவர் ஆகியோர் இந்த இரகசியக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அடங்குவர் எனவும் மலேசியாகினி செய்தி குறிப்பிட்டது.

இவர்கள் மூவருமே சாஹிட் ஹாமிடிக்கு எதிராக இயங்கும் குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் எனவும் கருதப்படுகிறது.

பத்திரிகையாளர்கள் யாரும் இந்தக் கூட்டத்தின் பக்கம் அனுமதிக்கப்படவில்லை.

நேற்றைய ஜாலான் பெல்லாமி கூட்டத்தில் சுமார் 24 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற அம்னோ தேசியப் பேராளர் மாநாட்டில் தேசியக்கூட்டணியில் தொடர்ந்து இடம் பெறுவதா இல்லையா என்ற முடிவை அம்னோ உச்சமன்றம் எடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அதற்கேற்ப, அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை சாஹிட் ஹாமிடி பெற்றுள்ளார் என அம்னோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்னோவின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 12 அல்லது14 பேர் சாஹிட்டுக்கு ஆதரவு தெரிவித்து தேசியக் கூட்டணிக்கான ஆதரவை மீட்டுக் கொண்டாலே போதும் மொகிதினின் அரசாங்கம் கவிழ்ந்து விடும் எனக் கருதப்படுகிறது.

சாஹிட்டுக்கு எதிரான முகாமைக் கட்டமைப்பதில் இரண்டு அம்னோ தலைவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர். நஸ்ரி அப்துல் அசிஸ், ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் ஆகிய இருவரும்தான் அவர்கள்.

25 தேசிய முன்னணி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணங்களைப் பெற்றிருப்பதாக நஸ்ரி அசிஸ் தெரிவித்திருந்தார். ஆனால் தான் இதில் சம்பந்தப்படவில்லை என ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் மறுத்திருக்கிறார்.

தற்போது அம்னோ சார்பாக 7 அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றனர். இவர்கள் அனைவருமே சாஹிட்டை ஆதரிக்கவில்லை. மொகிதின் யாசின் அமைச்சரவையில் தொடரவே விரும்புகின்றனர்.

இந்த அமைச்சர்களில் ஒருவரின் இல்லம்தான் ஜாலான் பெல்லாமியில் அமைந்திருக்கின்றது என்றும், அந்த இல்லத்தில்தான் நேற்றைய இரகசியக் கூட்டம் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் மலேசிய அரசியல் களம் மேலும் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இரா.முத்தரசன்