Home நாடு கொவிட் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக பிரதமரே செயல்படுவார்

கொவிட் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக பிரதமரே செயல்படுவார்

841
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கொவிட் தொற்றில் இருந்து நாட்டை மீட்கும் ஒரு முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சி திட்ட மன்றத்தின் தலைவராக  பிரதமர் மொகிதின் யாசினே செயல்படுவார்.

இந்த அறிவிப்பை நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் விடுத்தார். தேசிய மீட்சி திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு அமைச்சரவை குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக இனி மீட்சி திட்டத்திற்கான குழுவாக இந்த புதிய மன்றம் செயல்படும் எனவும் தெங்கு சாப்ருல் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் வெளிவந்த தகவல்களின்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இந்த மன்றத்திற்கு தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மன்றத்தில் பணியாற்ற மகாதீரும் ஆர்வம் காட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

மீட்சித் திட்ட மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டால், நடுநிலைமையைக் காட்டுவதற்காக பெஜூவாங் கட்சியிலிருந்து வெளியேறுவேன் என்றும் மகாதீர் தெரிவித்திருந்தார்.

கொவிட் தொடர்பான மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மீட்சித் திட்டத்திற்கான குழுவைக் கட்டமைப்பதில் தற்போது தெங்கு சாப்ருல் ஈடுபட்டு வருகிறார்.

இதன் தொடர்பில் தெங்கு சாப்ருல் தன்னை அழைத்து, மீட்சித் திட்டக் குழுவில் இணைந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

மீட்சித் திட்ட மன்றத்தில் உறுப்பினராக மகாதீர் இணைவாரா?

எனினும் அந்த மீட்சி மன்றத்தில் ஓர் உறுப்பினராக துன் மகாதீர் இணைவாரா என்பது இன்னும் தெரியவில்லை.

நீதிமன்ற வழக்கைத் தொடர்ந்து, மொகிதின் அரசாங்கம் மகாதீரின் பெஜூவாங் கட்சியின் பதிவை அங்கீகரித்துக் கடிதம் வழங்கியிருக்கிறது. நீதிமன்ற வழக்கின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், அந்த நீதிமன்ற முடிவை எதிர்த்து உள்துறை அமைச்சும், சங்கப் பதிவகமும் போராடியிருக்க முடியும். ஆனால், அதைத் தவிர்த்து விட்டு அங்கீகாரக் கடிதத்தை உள்துறை அமைச்சு வழங்கியிருக்கிறது.

இப்போது இரண்டாவது இணைப்பு வியூகமாக, மீட்சித் திட்டத்தில் இணைந்து கொள்ள மகாதீர் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம் தேசியக் கூட்டணியிலிருந்து அம்னோ விலகி விட்டதால், இனி தான் தோற்றுவித்த பெர்சாத்து கட்சியுடனும், ஆளும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துடனும் மகாதீர் நெருக்கம் பாராட்டத் தொடங்கலாம் – நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்திருப்பதாகக் கருதப்படும் மொகிதினும் மீண்டும் மகாதீரோடு கைகோர்க்கலாம் – என்ற ஆரூடங்களும் எழுந்திருக்கின்றன.