Home நாடு அம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா?

அம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா?

521
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பிரதமராக இடைக்காலத்திற்கு துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னரிடம் முன்மொழிந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை என்றாலும், அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிமையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னருக்குத் தெரிவித்திருக்கின்றனர் என்றும் அந்த ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்னோ தலைவர் சாஹிட் இப்ராகிம், எந்த சூழ்நிலையிலும் அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக ஆதரிக்கப் போவதில்லை என அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதி கூறியுள்ளார் என அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், துங்கு ரசாலி ஹம்சாவை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ளுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. நடுநிலையான பிரதமராக அவர் செயல்படுவார் என்ற நம்பிக்கை நிலவுவதால், அடுத்த பொதுத் தேர்தல் வரை துங்கு ரசாலி ஹம்சாவை பிரதமராக ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சிகள் முன்வரலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

பிரதமர் வேட்பாளர் நானில்லை – சாஹிட் ஹாமிடி அறிவிப்பு

ஒரு சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதுபோல் அம்னோவின் சார்பில் பிரதமராக தன்னைத் தானே முன்மொழிந்து கொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி மறுத்துள்ளார்.

நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்கத் தவறினால் பிரதமர் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

பக்காத்தான் – அம்னோ இணைவதைத் தவிர நெருக்கடிக்கு வேறு தீர்வில்லை

தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடிக்கு ஒரே தீர்வு அம்னோவும் – பக்காத்தான் கூட்டணியும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைவதுதான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

மொகிதின் யாசின் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெறுவதில் தோல்வி கண்டால், புதிய பிரதமராக ஒன்று அம்னோவின் வேட்பாளர் துங்கு ரசாலியை பக்காத்தான் கூட்டணி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அல்லது பக்காத்தான் சார்பிலான பிரதமர் வேட்பாளரான அன்வார் இப்ராகிமை ஏற்றுக் கொள்ள அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும்.

இந்த இரண்டில் ஒன்றுதான் அரசியல் நெருக்கடிக்கான சரியான – பொருத்தமான – தீர்வாக இருக்க முடியும்!