Home Photo News அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 6 : டிரம்ப் வெற்றி பெற்றால்? முதல் குற்றவாளி...

அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 6 : டிரம்ப் வெற்றி பெற்றால்? முதல் குற்றவாளி அதிபர்!

351
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப்

(அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – கட்டுரைத் தொடரில் இந்த முறை டிரம்ப் வெற்றி பெற்றால் அவர் முதல் குற்றவாளி அதிபராகப் பதவியேற்பார் என்பதற்கான பின்னணிக் காரணங்களைக் கண்ணோட்டமிடுகிறார் இரா.முத்தரசன்)

  • பெண் வாக்காளர்களை டிரம்ப் கவர முடியுமா?
  • டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பளித்திருக்கும் நீதிமன்றம்
  • தண்டனைக்குக் காத்திருக்கும் டிரம்ப்
  • வெற்றி பெற்றால் அதிபர் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை பெறுவாரா?
  • கமலா ஹாரிசுக்கு 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கிய பில் கேட்ஸ்

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை செவ்வாய்க்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. முன்கூட்டியே பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்து விட்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து பெண் வாக்காளர்கள் டிரம்புக்கு வாக்களிப்பாளர்களா அல்லது முதல் பெண் அதிபரைத் தேர்ந்தெடுப்போம் என கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பார்களா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

டிரம்ப் மீது நிறைய பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வரும் நிலையில், பெண்கள் அவருக்கு வாக்களிப்பது சந்தேகம்தான் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முதல் குற்றவாளி அதிபர்

பொதுவாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்படுபவர் மீது எந்த குற்றவியல் (கிரிமினல்) பின்னணிகளோ, வழக்குகளோ இருக்காது. அப்படி இருந்தால் அவர் அதிபர் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.

#TamilSchoolmychoice

ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக – நேர்மாறாக – சாதனை படைத்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். வரலாற்றில் அவர்தான் குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர்  அமெரிக்க அதிபர் போட்டியில் குதித்திருக்கும் முதல் வேட்பாளர்.

டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த மே 30-ஆம் தேதி (2024) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

தான் ஆபாசப் பட நடிகை ஒருவருடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதை மறைத்தது – 2016 அதிபர் தேர்தல் முடிவுகளை தவறான நடவடிக்கைகள் மூலம் திசை திருப்பியது – போன்றவையும் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியலில் அடக்கம்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்புக்கு என்ன தண்டனை அளிப்பது என்பதை கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் அறிவிக்கவிருந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதால் தன்மீதான தண்டனைக்கான தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என டிரம்ப் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் நவம்பர் 26-ஆம் தேதி குற்றவாளியான டிரம்புக்கான தண்டனை என்னவென்று அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் பல சட்ட சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளார். அதிபர் தேர்தலில் அவர் தோல்வியுற்றால் பிரச்சனை அத்துடன் முடிந்தது. தன் மீதான வழக்குகளின் மேல்முறையீடுகளில் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி விடுதலை பெற முயற்சி செய்வார்.அல்லது வழக்குகளில் தோல்வியடைந்தால் அதற்குரிய தண்டனையைப் பெறுவார். அது சிறைத் தண்டனையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்னாள் அதிபர் என்ற முறையில் அவருக்கு சிறப்புச் சலுகைகள் கிடைக்க வாய்ப்பில்லை.

ஆனால் அடுத்த அதிபராக வெற்றி பெற்றால்? அப்போதுதான் அடுத்த கட்ட சுவாரசியங்கள் – திருப்பங்கள் – சட்ட சிக்கல்கள் தொடங்கவிருக்கின்றன.

டிரம்ப் – கமலா இடையில் மிகக் குறுகிய இடைவெளி…

முதற்கட்டப் பிரச்சாரங்களின்போது அதிபராக கமலா ஹாரிஸ் வெல்வார் எனப் பரவலாகக் கருதப்பட்டது. ஆனால், நவம்பர் – 5 வாக்களிப்பு நாள் நெருங்க நெருங்க – டிரம்ப்புக்கான ஆதரவு பெருகி வருகிறது – அவர் குறுகிய இடைவெளியில்தான் கமலாவுடனான மோதலில் பின்தங்கியுள்ளார் – என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் 34 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துவிட்டனர்.

இப்போது அமெரிக்கா முழுவதிலும் அரசியல் ஆர்வலர்களிடையே எழுந்துள்ள கேள்வி – அதிபராக டிரம்ப் வெற்றி பெற்றுவிட்டால் – அவர் மீதான வழக்குகளின் நிலைமை என்ன என்பதுதான்!

நவம்பர் 26-ஆம் தேதி டிரம்புக்கு தண்டனை கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தண்டனை கடுமையாக இருந்து அவர் அதன் காரணமாக அதிபர் பதவி வகிக்க முடியாது என்ற நிலைமை வரலாம்.

அல்லது அவரின் மேல்முறையீடு விசாரணைகள் முடிவடையும்வரை அதிபராகப் பதவி வகிக்கலாம் என்ற சூழல் உருவாகலாம்.

இன்னொரு கோணத்தில் – வழக்குகள் முடியும்வரை அவர் இடைக்காலத்திற்கு அதிபராக இருக்க முடியாது என்ற நீதிமன்ற உத்தரவு விடுக்கப்படலாம். அப்படி நடந்தால், அவருடைய துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஜே.டி.வான்ஸ்,  இடைக்கால அதிபராகப் பதவி வகிக்கக் கூடும்.

டிரம்ப் வழக்குகளால் உருவாகியிருக்கும் சிக்கல்கள் அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன் முறை என்பதால், மேலே முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு யாராலுமே பதில் கூற இயலாது.

போகப் போகத்தான், வழக்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதை வைத்துத்தான், நீதிபதிகளின் தீர்ப்பைப் பொறுத்துத்தான் – டிரம்பின் அரசியல் எதிர்காலமும் நிர்ணயிக்கப்படும்.

அதிபர் அதிகாரங்களைப் பயன்படுத்தி டிரம்ப் விடுதலையாகலாம்!

டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றால் இன்னொரு சிக்கலும் எழ வாய்ப்பிருக்கிறது. அதிபருக்கான வானளாவிய அதிகாரங்களைக் கொண்டு அவர் தனக்குத் தானே விடுதலை தந்து கொள்ளலாம்.

முன்னாள் அதிபர் குற்றம் சாட்டப்படுவது மட்டும் இது முதன் முறையல்ல! அவரே மீண்டும் அடுத்த அதிபருக்கான தேர்தலில் போட்டியிடுவதும் இதுவே முதன் முறை. வெற்றி பெற்றால் அதிபருக்குரிய அதிகாரங்களைக் கொண்டு அவர் விடுதலை பெறுவார் என ஆரூடங்கள் நிலவுகின்றன. ஆனால் டிரம்போ, நீதிமன்றங்களின் மூலம் – சட்ட நடவடிக்கைகளின் மூலமாகத்தான் – நான் விடுதலை பெற விரும்புகிறேன் – மாறாக அதிபர் அதிகாரங்களை எனது சொந்த விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என தொடர்ந்து கூறிவருகிறார்.

அவ்வாறு சொன்னபடி செய்வாரா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய இன்னொரு அம்சம்!

கமலாவுக்கு வாரி வழங்கிய பில் கேட்ஸ்

கமலாவுக்கு 50 மில்லியன் ரிங்கிட் நன்கொடை வழங்கிய பில்கேட்ஸ்…

அதிபர் வேட்பாளர்களுக்கு யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம் எனக் கடந்த கட்டுரைகளில் பார்த்தோம். டிரம்புக்கு உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், 70 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்கியுள்ள நிலையில், மற்றொரு உலகப் பணக்காரரான பில் கேட்ஸ் கமலாவுக்கு ஆதரவாக 50 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியிருக்கிறார்.

இவர்கள் இருவரும்தான் இப்போதைக்கு அதிக அளவில் அதிபர் வேட்பாளர்களுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியிருக்கும் பணக்காரப் பிரமுகர்கள். இதுபோன்ற நன்கொடைகள் காரணமாக, டிரம்ப்-கமலா இருவருமே கோடிக்கணக்கில் பிரச்சாரங்களுக்குப் பணத்தை செலவழிக்கின்றனர் எனக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

எலோன் மஸ்க் நன்கொடை அளித்ததோடு மட்டுமின்றி சமூக ஊடகங்களில் பகிரங்கமாக டிரம்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அடிக்கடி டிரம்புக்கு ஆதரவான வாசகங்களைப் பதிவிடுகிறார். டிரம்ப் வெற்றி பெற்றால் அவரின் அமைச்சரவையில் – அரசாங்கத்தில் – எலோன் மஸ்க் முக்கியப் பொறுப்பை வகிப்பார் என்றும் ஆரூடங்கள் எழுந்துள்ளன.

டிரம்புக்கு எதிராக குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளராகப் போட்டியில் குதித்த விவேக் இராமசாமி என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமுகருக்கும் முக்கியப் பதவி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. டிரம்புக்கு பெருகிய ஆதரவு காரணமாக விவேக் குடியரசுக் கட்சிக்கான அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

எனவே, அதிபர் தேர்தலில் கமலா வெற்றி பெற்றால், அதிபராகும் முதல் பெண்மணி, முதல் இந்திய வம்சாவளியினர், முதல் கறுப்பினப் பெண்மணி என பல சாதனைகள் படைக்கப்படும்.

ஆனால், டிரம்ப் வெற்றி பெற்றால், முதல் குற்றவாளி அதிபர் பதவியில் அமர்கிறார் – நவம்பர் 26-ஆம் தேதி சிறைத் தண்டனை பெறுவாரா – அவருக்குப் பதிலாக துணையதிபர் ஜே.டி.வான்ஸ் அதிபராவாரா – என்பது போன்ற அடுக்கடுக்கான பல சட்ட சிக்கல்கள் எழும்.

நவம்பர் 5 – அதிபருக்கான வாக்களிப்பு முடிந்ததும் – யார் வெற்றி வாகை சூடினாலும் – ஏகப்பட்ட சுவாரசியங்கள் காத்திருக்கின்றன!

-இரா.முத்தரசன்

தொடர்புடைய மற்ற கட்டுரைகளின் இணைப்பு:


அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -1: வாக்களிப்பு ஏன் நவம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்படுகிறது?


அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -2; தொலைக்காட்சி விவாதங்கள் ஓர் அங்கமாக மாறியது எப்படி? 


அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -3 : கமலா ஹாரிஸ் தன் தந்தையாரைப் பற்றி அதிகம் பேசாதது…


அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் – 4 : அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு நடைமுறை எப்படி? 


அமெரிக்க அதிபர் தேர்தல் சுவாரசியங்கள் -5 : வெற்றி பெற்றாலும் 2 ½ மாதங்கள் காத்திருக்கும் புதிய அமெரிக்க அதிபர்!