லண்டன், ஏப்ரல் 30 – உலகின் மிகப் பழமையான பயணிகள் சுரங்க ரயில் திட்டம், இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் செயல்பட்டு வருகின்றது. இதில் நாளொன்றுக்கு மூன்று மில்லியன் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்து அரசு பொருளாதார சிக்கன நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த சுரங்க ரயில் நிலையங்களில் இருக்கும் அனைத்து டிக்கெட் அலுவலகங்களையும் மூடிவிட்டு, பொதுவான டிக்கெட் வழங்கும் முறையை செயல்படுத்த முனைந்துள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என்பதால் ஊழியர் சங்கங்கள் இந்த செயல்முறையை எதிர்த்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.
நேற்று இரவு 9 மணி அளவில் ஊழியர்கள் தங்களின் 48 மணி நேர வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் ரயில், கடல் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தினால், இன்று மற்றும் நாளைய வேலை நேரங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை நேற்று பலனில்லாமல் முடிந்ததால், அரசுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் குறித்து லண்டன் நகர மேயர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தம் அர்த்தமில்லாதது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள ஊழியர்கள் முன்வரவேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், பிரதமர் டேவிட் கேமரூனின் அரசு முடிவு செய்துள்ள சிக்கன நடவடிக்கையையே தான் செயல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து அடுத்தவாரம் திங்களன்று மூன்று நாள் வேலைநிறுத்தம் ஒன்றிற்கும் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.