Home வணிகம்/தொழில் நுட்பம் வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 7 – அமேசோனையே மிரட்டும் அலிபாபா

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 7 – அமேசோனையே மிரட்டும் அலிபாபா

1237
0
SHARE
Ad

உலகம் எங்கும் எந்த நாடாக இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் காலங்காலமாக படித்தும், கேட்டும் வரும் பழங்காலக் கதை ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. அதிலிருந்து அலிபாபா என்ற வார்த்தையை மட்டும் உருவி, நிறுவனமாக்கி அதனை இன்று உலகின் முதல் நிலை நிறுவனங்களில் ஒன்றாக – அதுவும் அமெரிக்காவின் அமேசோன் நிறுவனத்திற்குப் போட்டியாக உருவாக்கியிருப்பவர் ஜேக் மா.

நமது மலேசியாவிலும், தனது தொழிலை விரிவாக்கியிருப்பவர். அன்றைய நஜிப் முதல் இன்றைய துன் மகாதீர் வரை நெருக்கம் பாராட்டும் சிறந்த பொதுஉறவு குணாதிசயத்தைக் கொண்டவர்.

மகாதீர் அலிபாபா நிறுவனத்திற்கு வருகை தந்தபோது அவருடன் ஜேக் மா

வணிகத் துறைக்குள் வருவதற்கு முன்னால் ஒரு பல்கலைக் கழகத்தில் சொற்ப சம்பளத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியராக இருந்தவர் ஜேக் மா! இன்று புரள்வதோ கோடிகளில்!

#TamilSchoolmychoice

வாங்கும் சக்தி கொண்ட – இணையத்துக்குப் பரிச்சயமான – மிகப் பெரிய மக்கள் தொகையை சீனா கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஜேக் மா, அமேசோன் பாணியில் இணையம் வழி பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்க வியாபாரம் தீயாகப் பற்றிக் கொண்டது. அமேசோன் போன்ற மற்ற நிறுவனங்கள் எப்படி சீனாவுக்குள் நுழைவது என யோசித்துக் கொண்டிருந்த தருணத்தில் உள்ளே புகுந்து கலக்கினார் ஜேக் மா.

இன்று உலக அளவில் பல துணை நிறுவனங்களை உருவாக்கி மக்கள் பொருட்களை வாங்குவது, பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டார். மலேசியாவிலும் மிகப் பெரிய அளவில் இணையம் சார்ந்த தொழிற்பேட்டை ஒன்றை உருவாக்கி வருகிறார்.

தற்போது ஆர்ட்டிபிஷல் இன்டெலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையிலும் கால் பதித்துத் தொழிலை விரிவாக்கி இருக்கிறார்.

1999-இல் ஜேக் மா – பெங் லெய் என இருவரும் தொடங்கிய அலிபாபா நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 500 பில்லியன் டாலருக்கும் மேல்!

சீனாவின் ஹங் ஸாவ் நகரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனத்திற்கு அண்மையில் நமது பிரதமர் துன் மகாதீர் கூட வருகை தந்து பார்வையிட்டார்.

சீன அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கு படைத்தவராக உருவாகியிருக்கும் ஜேக் மா அமெரிக்க வரலாற்றில் தனது நிறுவனப் பங்குகளை பொதுமக்களுக்கு விநியோகித்ததன் மூலம் 21.8 பில்லியன் டாலர் திரட்டி சாதனை படைத்தார். அந்தப் பங்குகளை வாங்கியவர்களும் அதிக இலாபம் பார்த்தனர்.

சீனாவின் அமேசோன் எனப் புகழப்படுகிறது அலிபாபா. வருமானம் என்று பார்க்கும்போது, இணையம் சார்ந்த நிறுவனங்களில் உலகின் ஐந்தாவது நிறுவனமாகத் திகழ்கிறது.

ஒரே நாளில் இணையம் வழி அதிக பயனீட்டாளர்களை ஈர்க்கும் திட்டத்தைத் தொடங்கிய அலிபாபா நவம்பர் 11-ஆம் தேதியை அதற்கென நிர்ணயித்து, மிகப் பெரிய தள்ளுபடி விழுக்காட்டு விலைகளை அறிவித்தது. 2009-இல் ‘சிங்கிள்ஸ் டே’ (Singles Day) என்ற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது அந்த ஆண்டில் ஒரே நாளில் 7.8 மில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களை விற்பனை செய்தது அலிபாபா.

ஆனால், கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி – குளோபல் ஷாப்பிங் பெஸ்டிவல் எனப் பெயர் மாற்றம் கண்ட – விற்பனைத் திட்டத்தின்வழி அலிபாபா ஒரே நாளில் விற்பனை செய்த பொருட்களின் மதிப்பு 25 பில்லியன் டாலர்!

இதிலிருந்தே அதன் வளர்ச்சியையும், மக்களிடையே அது ஏற்படுத்தியிருக்கும், தாக்கத்தையும் மாற்றத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய முந்தைய கட்டுரைகள்:

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 1 ஆப்பிள்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய 10 நிறுவனங்கள் # 2 அமேசோன்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 3 பேஸ்புக்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 4 ‘அல்பாபெட்’

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 5 – மைக்ரோசோஃப்ட்

வாழ்க்கையையும் உலகையும் மாற்றிய நிறுவனங்கள் # 6 – டுவிட்டர் -140 எழுத்துகளுக்குள் மனிதனைக் கட்டுப்படுத்தியது