Home நாடு ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார்

ரந்தாவ்: தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது!- அன்வார்

712
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் அங்கேயே இருந்து, இந்தியர்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆடியும், பாடியும் மக்களின் வாக்குகளைப் பெற முயற்சித்தும், இறுதியில் அது தேசிய முன்னணிக்கு சாதகமாகவே அமைந்தது.

அதிலும், இந்தியர்களின் பெரும்பாலான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ள விவகாரம், நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.   

ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தோல்வியடைந்தக் காரணத்தைக் கண்டறியும் வகையில் நெகிரி செம்பிலான் பிகேஆர் கட்சி மும்முரமாக செயல்பட்டு வருவதாக அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரான முகமட் ஹசான் 4,510 பெரும்பான்மை வாக்குகளுடன் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராமை தோற்கடித்தார்.

பண்டார் ஏகார் வாக்குப்பதிவு பெட்டிகளை மட்டுமே நம்பிக்கைக் கூட்டணி முன்னிலைப் பெற்றது.

இதனிடையே, பெக்கான் சாகா மற்றும் லின்சும் வாக்குப்பதிவு பெட்டிகளை தேசிய முன்னணி வெற்றிக் கொண்டது. இப்பகுதிகளில், அதிகமான இந்தியர்களின் வாக்குகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடந்த, இடைத் தேர்தல்களில், கேமரன் மலை, செமினி மற்றும் ரந்தாவில் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி தோல்வியைத் தழுவி உள்ளது குறிப்பிடத்தக்கது.