கோலாலம்பூர் : பரபரப்பான அரசியல் உச்சகட்டத்தை நோக்கி இந்த வாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது மலேசிய அரசியல் களம். 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், மொகிதின் தலைமையிலான தேசியக் கூட்டணி மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுத் தளத்தை இழந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணியின் பலம் 110 ஆக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பலம் 108 ஆக இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இதுவரையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மான் மரணத்தால் மொகிதினின் நாடாளுமன்ற பலத்தில் ஒன்று குறைந்துவிட்டது.
கடந்த திங்கட்கிழமை நவம்பர் 23-ஆம் தேதி அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தார். தான் சமர்ப்பித்திருக்கும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், இல்லாவிட்டால் வரவு செலவுத் திட்டம் மீதிலான விவாதத்தில் பங்கெடுக்க மாட்டேன் அறிவித்திருக்கிறார் துங்கு ரசாலி.
நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசானுக்கு எழுதிய நவம்பர் 19-ஆம் தேதியிட்ட கடிதத்தில் துங்கு ரசாலி தனது முடிவைத் தெரிவித்திருக்கிறார். அந்தக் கடிதத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கும் துங்கு ரசாலி அனுப்பி வைத்திருந்தார்.
காண்க:
selliyal | Budget 2021 : Will it be defeated due to UMNO’s split? | 23 Nov 2020
செல்லியல் காணொலி | “அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?”
தனிமைப்படுத்தப்பட்ட புங் மொக்தார்
சபா கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினரும் சபா மாநில துணை முதல்வருமான அம்னோவின் புங் மொக்தார் (படம்) தற்போது கொவிட்-19 தொற்று அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவரால் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள முடியாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத நிலையில் இப்போதைக்கு 110 ஆக மட்டுமே தேசியக் கூட்டணியின் பலம் இருக்கிறது.
ஜெப்ரி கித்திங்கான் கலந்து கொள்ள முடியுமா?
மொகிதினுக்கு ஆதரவான கெனிங்காவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி கித்திங்கான் சபாவிலிருந்து கோலாலம்பூர் திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்பட்டார். தனது தனிமைப்படுத்தல் முடிந்துவிட்டதாகவும் இனி நாடாளுமன்றக் கூட்டத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் எதிர்க்கட்சிகளோ அவர் கலந்து கொள்ள முடியாது என எதிர்ப்புக் குரல்கள் தெரிவித்திருக்கின்றன. ஜெப்ரி கித்திங்கான் (படம்) கலந்து கொள்ள அனுமதிக்கப்படாவிட்டால் மொகிதினின் நாடாளுமன்ற பலம் மேலும் குறைந்து 109 ஆக மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
“இந்த வாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாட்டிற்குப் புதிய பிரதமர் கூடக் கிடைக்கலாம். வரவு செலவுத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்படலாம். நிராகரிக்கப்படலாம். நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்” என அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
தங்களின் தேசிய முன்னணியின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிதியமைச்சர் தெங்கு சாப்ருலுக்கு வியாழக்கிழமை வரை அவகாசம் அளித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான்.
பிளவுபட்டு நிற்கும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாகப் பிளவுபட்டு வாக்களிப்பார்கள் – வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பார்கள் – என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன.
ஜோகூர் மாநில நாடாளுமன்ற உறுப்பினரும் அம்னோ உதவித் தலைவருமான காலிட் நோர்டின் (படம்), வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அம்னோ உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி எதிர்த்து வாக்களிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
நடப்பு மொகிதின் அரசாங்கத்தின் சார்பில் நம்பிக்கைத் தீர்மானத்தை அரசாங்கமே நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து தங்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி தனது நாடாளுமன்ற உரையில் அறிவித்திருக்கிறார்.
ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பை மீட்டுக் கொள்ள சேமிப்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், வங்கிக் கடன்களுக்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் நிறைவேற்றினால்தான் வரவு செலவுத் திட்டத்திற்கு எனது ஆதரவு என நஜிப் துன் ரசாக் கூறியிருக்கிறார்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்காத 23 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக நியமனம் பெற்றிருக்கிறார் நஜிப். எனவே, வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுமா என்பதில் நஜிப்பின் நிலைப்பாடும் முக்கியமாகும்.
38 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு
இப்படியாக முரண்பட்டு, வேறுபட்டு நிற்கும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் 38 ஆகும். இதில் துங்கு ரசாலி ஏற்கனவே கூறியதைப் போல் வாக்கெடுப்பில் பங்கெடுக்கப்போவதில்லை என அறிவித்து விட்டார்.
இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரணங்களைத் தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 220 மட்டும்தான்!
இதில் குறைந்த பட்சம் பெரும்பான்மை என்பது 111 என்ற எண்ணிக்கையாகும்.
இதில், ஓரிருவர் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தாலும் திட்டம் தோல்வியடைந்து விடும்.
இன்றைய நிலையில் எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒருமித்த குரலில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இறுதி நேரத்தில் யாராவது மனம் மாறி மொகிதின் பக்கம் சாய்வார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனினும் வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கான கால அவகாசம் இன்னும் இருக்கிறது.
நாளையே, அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி சில திருத்தங்களோடு வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டால், மொகிதின் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும்.
இந்நிலையில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிளவுபட்டு வாக்களிப்பார்களா? வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பார்களா?
இதையெல்லாம் எதிர்கொள்ள பிரதமர் மொகிதின் யாசின் வகுத்திருக்கும் வியூகங்கள் என்ன?
நாடும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!