(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் –போன்ற காரணங்களால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் கோட்டையாகக் கருதப்பட்ட கெடா மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாஸ் கட்சியின் அசிசான் அப்துல் ரசாக் கெடா மாநிலத்தின் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்.
ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பாஸ் கட்சியும், மந்திரி பெசார் அசிசானும் நிகழ்த்திய அரசியல் குளறுபடிகள், அப்போதைய பக்காத்தான் ராயாட் கூட்டணியின் ஒற்றுமையின்மை ஆகியவை காரணமாக 2013-இல் மீண்டும் தேசிய முன்னணி கெடா மாநிலத்தைக் கைப்பற்றியது.
2013-இல் நஜிப்புக்குத் தேவைப்பட்ட முக்ரிஸ் மகாதீர்
2013-இல் மீண்டும் கெடாவைக் கைப்பற்ற பிரதமர் நஜிப் வகுத்த வியூகத்தின் மையம் முக்ரிஸ் மகாதீர்!
துன் மகாதீரின் மகனும் அப்போதைய ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினரும் (2008-2013 தவணைக் காலத்தில் ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினராக முக்ரிஸ் இருந்தார்), அம்னோவின் இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டவருமான முக்ரிஸ் மகாதீரை அடுத்த கெடா மந்திரி பெசாராக களமிறக்கியதுதான் கெடாவை மீண்டும் கைப்பற்ற நஜிப் வகுத்த வியூகம்!
அந்த வியூகமும் வெற்றி பெற்றது. காரணம் சொல்லத் தேவையில்லை. அந்த அளவுக்கு கெடா மாநிலத்தில் பரந்து விரிந்திருந்தது அந்த மண்ணின் மைந்தரான மகாதீரின் செல்வாக்கு!
காலமாற்றத்தால் மகாதீருக்கும், நஜிப்புக்கும் இடையில் முளைத்த அரசியல் பகைமை 2013-இல் கெடா மந்திரி பெசாராகப் பதவியேற்ற முக்ரிஸ் மகாதீரை அம்னோவிலிருந்தே நீக்கும் அளவுக்கு மோசமடைந்தது.
புதிதான, புதிரான களமாக மாறியிருக்கும் கெடா!
இன்று கெடா மாநிலம் புதிதான, ஒரு புதிரான அரசியல் களமாக உருவெடுத்திருக்கிறது. மகாதீரை பல்லாண்டு காலம் எதிர்த்து வந்த பாஸ் கட்சி தனித்து நிற்கிறது. அவரோடு பகைமை பாராட்டிய பிகேஆர் கட்சியும், ஜசெகவும் இன்று மகாதீரோடு கரம் கோர்த்து நிற்கின்றன. மகாதீரின் மகன் முக்ரிஸ் கெடா மாநிலத்தின் அடுத்த மந்திரி பெசாராக மீண்டும் 14-வது பொதுத் தேர்தலில் முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் இந்த முறை பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளராக!
அதே வேளையில் முக்ரிசுக்கு நாடாளுமன்றத் தொகுதி ஒன்றும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகாதீர் கெடாவில் போட்டியிடுவார் என ஆரூடம் கூறப்படும் இரண்டு தொகுதிகள், லங்காவி மற்றும் அவரது முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான குபாங் பாசு.
மகாதீர் லங்காவியில் போட்டியிட்டு வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவர் அங்கே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் 1974 முதல் 2004 வரை சுமார் 30 ஆண்டுகளாக அவர் வெற்றிகரமாகத் தற்காத்து வந்த குபாங் பாசு நாடாளுமன்றத் தொகுதியிலும் அவருக்கு அபரிதமான செல்வாக்கு பரந்து விரிந்து கிடக்கிறது.
எனவே, அந்த செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் மகாதீரின் மகன் முக்ரிஸ் குபாங் பாசு தொகுதியில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்பட்டால், தேசிய முன்னணி வேட்பாளரைத் தனது தந்தையின் செல்வாக்கைக் கொண்டு அவரால் தோற்கடிக்க முடியும் என்ற ரீதியில் பக்காத்தானில் வியூகம் வகுக்கப்படுகிறது. தொகுதி ஒதுக்கீட்டு உடன்பாடுகளின்படி நாம் விவாதிக்கும் லங்காவி, ஜெர்லுன், குபாங் பாசு ஆகிய மூன்று தொகுதிகளுமே மகாதீரின் பெர்சாத்து கட்சிக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, முக்ரிஸ் குபாங் பாசுவில் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெற்று, பக்காத்தான் கூட்டணிக்கு மற்றொரு வெற்றியைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் குபாங் பாசு தொகுதியை முக்ரிஸ் கைப்பற்றுவது என்பதும் அவ்வளவு எளிதான காரியமும் அல்ல!
ஜொஹாரி பகாரோமின் அனுபவம்
மகாதீரின் பதவி விலகலுக்குப் பின்னர் 2004 முதற்கொண்டு கடந்த 3 தவணைகளாக குபாங் பாசு தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் நடப்பு தற்காப்புத் துணையமைச்சரான டத்தோஸ்ரீ முகமட் ஜொஹாரி பின் பகாரோம் (வயது 63) கடந்த 2013 பொதுத் தேர்தலில் 10,444 வாக்குகள் பெரும்பான்மை வித்தியாசத்தில் இங்கே வெற்றி பெற்றார்.
ஒரே மாறுதல் – அப்போது தேசிய முன்னணிக்கு எதிராக மகாதீர் செயல்படவில்லை!
பாஸ் கட்சியின் நிலைப்பாடும் இன்னும் தெரியவில்லை. மூன்றாவது தரப்பாக அந்தக் கட்சி போட்டியிட்டால், எத்தனை வாக்குகளைப் பிரிக்கும் என்பதும் குபாங் பாசுவில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகும் மற்றொரு அம்சம். மகாதீர் காலத்திலும் அவருக்குப் பின்னரும் இந்தத் தொகுதியில் பாஸ் கட்சிதான் குபாங் பாசுவில் போட்டியிட்டு வந்தது என்பதால், இந்தத் தொகுதியில் அந்தக் கட்சியின் செல்வாக்கையும் நாம் குறைத்து மதிப்பிடமுடியாது.
தந்தையின் செல்வாக்கைக் கொண்டு அவரது முன்னாள் தொகுதியான குபாங் பாசுவை தேசிய முன்னணியைத் தோற்கடித்து மீட்டெடுப்பாரா முக்ரிஸ்?
-இரா.முத்தரசன்
தொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (6) – பாகோ!
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (7) – செம்பூர்ணா!
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (8) – கோத்தா மருடு (சபா)
தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (9) – பியூபோர்ட் (சபா)
தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (10) – ஜோசப் குருப் தடுமாறப் போகும் பென்சியாங்கான்!
தே.முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (11) – லங்காவி! மகாதீர் வெல்லப் போகும் தொகுதியா?